தாக்கரே பிரிவு சொத்துக்களை ஷிண்டே பிரிவுக்கு மாற்றக் கோரும் மனு தள்ளுபடி!
உத்தவ் தாக்கரே பிரிவின் கட்சி சொத்துக்களை மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியின் பிரிவுக்கு மாற்றக் கோரும் வழக்கை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஏப். 28) தள்ளுபடி செய்தது.
மும்பையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஆஷிஷ் கிரி என்பவர் இது தொடர்பான வழக்கை போட்டிருந்தார். அவர், தமது மனுவில் சிவசேனை கட்சியின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களை உத்தவ் தாக்கரே பிரிவினர் அபகரித்துக் கொள்ளாமல் தடுக்க வேண்டும். அந்த சொத்துக்களை முதல்வர் ஷிண்டே தலைமையிலான பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொண்டிருந்தார்.
மேலும் தேர்தல் ஆணையும் ஷிண்டே பிரிவுதான் உண்மையான சிவசேனை என்று அங்கீகரித்துள்ளதால் அக் கட்சிக்கு சொந்தமான அனைத்து அசையும், அசையா சொத்துக்களையும் புதிய தலைவருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
ஓர் அரசியல் கட்சியின் நிதி என்பது தொண்டர்களாலும் தலைவர்களாலும் வசூலிக்கப்பட்டதாகும். ஒருவேளை அந்த குறிப்பிட்ட அரசியல் கட்சி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டதாக பிரிந்து போனாலே அக்கட்சியின் சொத்துக்களுக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது என்றும் மனுதாக்கல் செய்த வழக்குரைஞர் ஆஷிஷ் கிரி வாதிட்டார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பிரிவுதான் உண்மையான சிவசேனை என்றும் அந்த கட்சிக்குத்தான் அதன் சின்னம் சொந்தமாகும் என்று கூறி தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஷிண்டே தலைமையிலான பிரிவினர் சிவசேனை பவனுக்கும், கட்சி நிதிக்கும் உரிமை கோரலாம் என்று உத்தவ் தாக்கரே பிரிவு எதிர்பார்த்திருந்தது.
இந்த நிலையில் சிவசேனை சொத்துக்களுக்கு ஆசைப்படவில்லை என்று இந்த மாத தொடக்கத்தில் முதல் ஷிண்டே தலைமையிலான பிரிவு கூறியிருந்தது. மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்குரைஞர் மனு தாக்கல் செய்துள்ளதற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில் மகாராஷ்டிர அமைச்சரும் ஷிண்டே பிரிவின் செய்தித் தொடர்பாளருமான தீபர் கேசர்கர், தேர்தல் ஆணையம் எங்கள் பிரிவை உண்மையான சிவசேனை என்று அங்கீகரித்து, சிவசேனை கட்சி சின்னத்தையும் வழங்கியுள்ளது. ஆனாலும் கட்சிக்கு சொந்தமான இடத்தையும் நிதியையும் கோருவதில் எங்களுக்கு ஆர்வமில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் தாக்கரே பிரிவுடன் தொடர்புடைய சொத்துக்களுக்கு நாங்கள் உரிமை கோரமாட்டோம் என்று ஷிண்டே ஏற்கெனவே தெளிவுபடுத்திவிட்டார் என்றார்.
இதனிடையே உத்தவ் தாக்கரே பிரிவினரும், ஷிண்டே பிரிவினரும் ஏற்கெனவே தாக்கல் செய்த பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.