காங்கிரஸ் கட்சியை கண்டு பயப்படுகிறார் பிரதமர் மோடி: கெளரவ் கோகோய்!

கெளரவ் கோகோய்
கெளரவ் கோகோய்

பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எனும் மனநோய் இருக்கிறது. அதனால்தான் அவர், மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு பதிலளித்து பேசும்போது, மணிப்பூர் பற்றி அதிகம் பேசாமல் காங்கிரஸ் பற்றியே அதிகம் பேசினார் என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.

மக்களவையில் வியாழக்கிழமை பேசிய நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான கெளரவ் கோகோய், பா.ஜ.க.வின் தேசியவாதம் போலியானது. அவர்கள் ஒன்றும் தேசபக்தர்கள் அல்ல என்றும் குற்றஞ்சாட்டினார். எதிர்கட்சிகளின் நீண்ட போராட்டத்திற்கு பிறகு நாடாளுமன்றம் வந்த பிரதமர் மோடி சுமார் 90 நிமிடங்கள் பேசியபோதிலும் அதில் மணிப்பூர் பற்றிய எந்த குறிப்பும் இல்லை என்று கூறி எதிர்க்கட்சியினர் வெளிநடப்புச் செய்தனர்.

மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.க. தனது தோல்விகளை மறைக்கிறது என்று கூறிய கெளரவ் கோகோய், 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வை, “இந்தியா” கூட்டணி தோற்கடிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இரண்டு மணி நேரம் பேசிய பிரதமர், மணிப்பூரை பற்றி பேசுவதற்கு பதிலாக அங்குள்ள மக்களின் வலிகளை பகிர்ந்து கொள்வதற்கு பதிலாக, காங்கிரஸை பற்றித்தான் அதிகம் விமர்சித்ததாக அவர் கூறினார்.

அவர் பேசிய இரண்டு மணிநேரத்தில், நமது தேசத்தை பற்றி அவர் பேசவில்லை அவர் மனதில் காங்கிரஸ் பற்றிய பயம் இருந்தது. மேலும் அவர் காங்கிரஸ் மனநோயில் இருந்தார் என்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. பெரும்பாலும் காங்கிரஸ் கட்சியை குறைசொல்வதிலேயே நேரத்தை அவர் செலவிட்டார். எதிர்க்கட்சிகளின் “இந்தியா”, “இந்தியா” என்ற கோஷம் அவர் மனதில் கிலியை ஏற்படுத்திவிட்டதோ என்னவோ. அதனால் அவர் மணிப்பூர் பற்றி பேசாமல் காங்கிரஸ் கட்சியை குறைகூறியே பெரும்பாலும் பேசினார் என்றார் கோகோய்.

அவரது பேச்சு என்னவாக இருந்தாலும், எதிர்க்கட்சியான நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். வரும் மக்களவைத் தேர்தலில் வெல்வோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார் கெளரவ் கோகோய்.

கெளரவ் கோகோய் மேலும் கூறுகையில் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை. நாடாளுமன்றத்தில் மணிப்பூர் பற்றி பேச அந்த மாநிலத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் ஏன்  அனுமதிக்கப்படவில்லை. சரியாக செயல்படாத மணிப்பூர் முதல்வருக்கு நற்சான்று ஏன்?, சீன ஊடுருவல், பணவீக்கம், ஜம்மு காஷ்மீர் குறித்து முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறிய கருத்துக்கு பதில் என்ன? இப்படி நாங்கள் கேட்ட கேள்விக்கு பிரதமர் பதிலளிக்காததால்தான் வெளிநடப்புச் செய்தோம்.

மணிப்பூர் விவகாரத்தில் பா.ஜ.க. உண்மையை மறைக்கிறது. அதனால்தான் அந்த மாநில எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படவில்லை. இதிலிருந்து அவர்கள் உண்மையை மறைக்க முற்படுவது தெளிவாகத் தெரிகிறது. பா.ஜ.க.வினரின் தேசியவாதம் போலியானது. அவர்கள் தேசபக்தர்கள் அல்ல. நாட்டை பிளவுபடுத்துவதிலேயே அவர்கள் குறியாக இருக்கிறார்கள் என்றார் அவர்.

பிரதமரின் உரை ஏமாற்றம் அளித்த்துடன் குழப்பத்தையே ஏற்படுத்தும் வகையில் இருந்தது. நாடாளுமன்ற புறக்கணிப்பை கைவிட்டு மணிப்பூர் விவகாரத்தில் மவுனம் கலைப்பார் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் ட் விட்டர்எக்ஸ் மூலம் கருத்து தெரிவித்துள்ளார்.

 நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்ததற்கு காரணம் இரண்டுதான். ஒன்று நாடாளுமன்ற ஜனநாயகத்தை கட்டிக்காக்க வேண்டும் என்பது. இரண்டாவது வெளிநாட்டு நாடாளுமன்றங்களில் பேசிய பிரதமர் மோடியை, இந்திய நாடாளுமன்றத்தில் பேசவைப்பது ஆகியவைதான். அதாவது மணிப்பூர் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோளாக இருந்தது. பிரதமர் மோடி மக்களவைக்கு வந்து பேசியபோதிலும் மணிப்பூர் மக்களுக்கு எந்த நீதியும் கிடைக்கவில்லை என்றார் கெளரவ் கோகோய்.

பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை. இது தொடர்பான உறுதியான அறிக்கையை அவர் ஏன் வெளியிடவில்லை. மணிப்பூர் முதல்வரை பதவி விலகுமாறு ஏன் கோரவில்லை. இதற்கெல்லாம்  காரணம் ஆணவம் அவர் கண்ணை மறைத்துவிட்டது என்பதுதான் என்றார் கோகோய்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com