
பொன்மனச் செம்மல் என்று அன்போடு அழைக்கப்பட்ட எம்.ஜி.ராமசந்திரன் தமிழக திரையுலகிலும் அரசியலிலும் தனி முத்திரை பதித்தவர். 1987-ம் வருடம் டிசம்பர் 24-ம் தேதி எம்.ஜி.ஆர் காலமானார். அதைத் தொடர்ந்து வெளியான கல்கி இதழில் வெளியான தலையங்கம்..இதோ!
மனிதாபிமானத்தின் மொத்த உரு மறைந்து போனது; பொன்மனச் செம்மலை இழந்த தமிழகம் ஏழையாகிவிட்டது; மக்கள் திலகமிழந்து தவிக்கின்றனர்; கொடுத்துச் சிவந்த கரங்கள் ஓய்ந்து போயின.
புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், மக்கள் திலகம், டாக்டர் போன்ற பட்டங்களுள் எம்.ஜி.ஆருக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானது பொன்மனச் செம்மல் என்ற வர்ணனையே. இதற்கு நிருபணமாக, அவரது திரை உலக வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி, அவரைக் குறை கூறி விமர்சித்தவர்கள்கூட அவரது மனம், பொன்மனம் என ஒப்புக் கொண்டதைக் கூறலாம். அந்தப் பொன்னான மனம்தான் படிப்பறியா ஏழைச் சிறுவனாக இருந்த அவரைப் படிப்படியாக வாழ்க்கையில் உயரச் செய்து, மாநில முதல்வர் பதவியில் அமர்த்தியது. சாமானிய நிலையிலிருந்து வளர்ந்த காரணத்தாலேயே அவரால் சாமானிய மக்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு அனுதாபத்துடன் நடந்துகொள்ள முடிந்தது.
திரை உலகில் கொடிகட்டிப் பறந்து பணம் குவித்தபோதே கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கரங்கள் அவருடையவை.
அவருடைய படங்களையும் நடிப்பையும் குறை கூறி விமர்சித்தவர்கள் உண்டு. ஆனால், அவர் படம் எடுத்தது கிரிடிக்குகளுக்காக அல்ல. சாமானிய மக்களின் நலனை மனத்தில் கொண்டே அவர் படங்களைத் தயாரித்தார்; நடித்தார். அந்தப் படங்களில் அவர் காதலைப் போற்றினார்; முறை தவறிய காதலை அல்ல! வீரத்தை வளர்த்தார்; வன்முறையை அல்ல! நேர்மை, ஒழுக்கம், தேசபக்தி, இரக்கம், உழைப்பு, கடமை உணர்வு போன்ற உயர்ந்த குணங்களைத் தமது திரைப்படங்கள் மூலம் மக்களிடையே அவர் வளர்த்தார். இவை அவருடைய மனிதாபிமானத்தின் மறு வடிவங்களே.
இந்த மனிதாபிமானம் காரணமாகவே ஆட்சிக்கு வருவது அவருக்கு எளிதாயிற்று. ஆட்சியில் அமர்ந்த பிறகும் பொன்மனச் செம்மலின் மனிதாபிமானப் பணிகள் தொடர்ந்தன. இலவசச் சத்துணவில் ஆரம்பித்து, இலவசக் காலணிகள் வரை பலப்பல பொருள்களை ஏழை மக்களுக்குக் கிடைக்கச் செய்தார். இதனைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் தவறு என்று விமர்சிப்பது சாத்தியமே. ஆனால், மனிதாபிமானம் என்பது பொருளாதார நியதிகளைக் கடந்து நிற்கும் ஒன்று. பொருளாதாரக் கண்ணோட்டத்தில் பார்த்தால்கூட, லோன் மேளா நடத்திக் காகித நோட்டுக்களை மக்களிடையே வாரிவிட்டுப் பண வீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் உருவாக்கி அவர்களை மேலும் துன்பத்தில் ஆழ்த்துவதைவிட, உற்பத்தியான பொருள்களை இலவசமாக வழங்குவது எவ்வளவோ மேலானது.
எம்.ஜி.ஆருடைய மற்றொரு சிறப்பியல்பு அவருடைய யதார்த்தப் போக்கும் அதன் விளைவாகக் காலத்துக்கு ஏற்பத் தமது கொள்கைகளை மாற்றிக்கொள்ளத் தயங்காத தன்மையும். இந்தப் பரந்த மனப்பான்மைதான் அ.தி.மு.க. என்ற பெயரை அ.இ.அ.தி.மு.க. என்று மாற்றியமைக்கத் தூண்டுதலாக இருந்தது. இந்த ஒரே ஒரு செயலின் மூலமே அவர் தேசிய ஒருமைப்பாட்டினை மிக அழுத்தமாக வலியுறுத்தி, பிரதேசப் பற்றைக் கடந்து நின்ற அனைத்திந்தியத் தலைவராகி விட்டார்! விடுதலைப் புலிகளை ஆதரித்து, அரசு கஜானாவிலிருந்தே அவர்களுக்குப் பண உதவியும் செய்து வந்த அவர், இந்தியா – இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான பின்னர் பிரத்யட்ச நிலையை உணர்ந்து அதற்கு முழு ஆதரவை அளித்தார். விடுதலைப்புலிகளை அவர் விரோதித்துக் கொள்ளவில்லை. எனினும், அவர்கள் வன்முறையைக் கைவிட்டு அமைதி திரும்பவும் ஜனநாயகம் மலரவும் ஒத்துழைக்க வேண்டும் என்று விரும்பிச் செயலாற்றினர். திராவிடர் கழகப் பாரம்பரியத்தில் வந்தபோதிலும் இறையுணர்வு மிக்கவராக மாறி, மக்களின் மனங்களை முன்னெப்போதையும்விட அதிகமாக கவர்ந்தார்.
அவருடைய திடசித்தமும் அஞ்சா நெஞ்சமும் அவர் குண்டடிப்பட்ட நிலையிலும் துணை நின்றன; கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த நிலையிலும் கடமைகளைக் கடைசி வரை கவனிக்கத் தூண்டின. எம்.ஜி.ஆரின் ஆட்சியில் குறைகள் இல்லாமல் இல்லை; ஆனால் அவற்றை எண்ணிப் பார்க்கிற தருணம் அல்ல இது. நிறைகளை ஏற்று, குறைகளை இட்டு நிரப்பித் தமிழகத்தை அவர் கனவு கண்ட உன்னத நிலைக்கு உயர்த்த அனைவரும் உறுதி பூண வேண்டிய நேரம்.
இன்று அவர் உடல் அமைதி அடைந்துவிட்டது; ஆன்மா சாந்தி பெற்றுவிட்டது; தமிழக மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழும் அமரர் ஆனார், எம்.ஜி.ஆர்.கண்ணீர் விட்டுக் கதறும் தமிழகம், இப்படிப்பட்ட ஒரு தவப் புதல்வனைப் பெற்றதற்காகத் தலைநிமிர்ந்தும் நிற்கிறது.
கல்கி 1988 ஜனவரி-3 இதழில் தலையங்கமாக வந்தது.