நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு: நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க!

நட்டாவுக்கு பதவி நீட்டிப்பு: நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகும் பா.ஜ.க!

ஒரு வழியாக ஜே.பி.நட்டாவின் தேசியத் தலைவர் பதவிக்கு நீட்டிப்பு கிடைத்திருக்கிறது. டெல்லியில் இரண்டு நாள் நடைபெற்ற பா.ஜ.க கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ஜே.பி.நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதாக அமித்ஷா அறிவித்தார்.

டெல்லியில் கூடிய பா.ஜ.கவின் தேசிய செயற்குழு, தேசியத் தலைவரின் பதவிக்காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிப்பதாக ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமித்ஷா அறிவித்தார். நட்டா தலைமையில் பா.ஜ.க வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கும் என்றும், 2019ல் கிடைத்த வெற்றியைவிட மிகப்பெரும் வெற்றியை அடையும் என்றும் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஜே.பி. நட்டாவின் மூன்றாண்டுகால பதவிக்காலம், நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்படுமா அல்லது காத்திருப்புப் பட்டியிலில் உள்ள தலைவர்கள் யாராவது புதிய தலைவராக பொறுப்பிற்கு வருவார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

பா.ஜ.கவின் தேசியத் தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் வரை நீடிக்கலாம். கட்சியின் செயற்குழு கூடி தேசியத் தலைவரை முடிவு செய்யும். கட்சி விதிகளின்படி ஒருவர் தொடர்ந்து இருமுறைக்கு மேல் தேசியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட முடியாது. நட்டாவுக்காக கட்சி விதிகள் தளர்த்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

பா.ஜ.கவின் கட்சித்தலைவராக பதவி வகிப்பவர் எந்தவொரு அரசு பதவிகளிலும் இருக்க முடியாது. மத்தியிலோ, மாநிலத்திலோ அமைச்சர் பதவியிலோ வேறு எந்தவொரு அரசுப் பதவியிலோ இருக்கவும் முடியாது. தேசியத் தலைவராக இருந்தவர்கள் பதவியை ராஜினமா செய்துவிட்டு மத்திய அமைச்சராக பதவியேற்றிருக்கிறார்கள். குடியரசு துணைத்தலைவர் பதவியிலும் போட்டியிட்டு வென்றிருக்கிறார்கள்.

நட்டா விஷயத்தில் அனைத்து சாத்தியங்களும் இருந்தன. மத்திய அமைச்சரவையில் அமைச்சராக பதவியேற்பவர். சுகாதாரத் துறை அமைச்சராக வருவதற்கும் வாய்ப்புண்டு என்று டெல்லி வட்டாரங்களில் செய்திகள் உலா வந்தன. இமாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று விலகிவிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தபோது, அவரது சொந்த ஊர் என்பதால் தேர்தல் பிரசாரங்களுக்கு நட்டா பொறுப்பாளராகவும் ஸ்டார் பிரசாகராகவும் இருந்தார். சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு தோல்வி கிடைத்தபோது, தேசியத் தலைவர் பதவியிலிருந்து விலகுவார் என்று எதிர்பார்த்ததும் நடைபெறவில்லை.

இந்நிலையில் நட்டாவுக்கு கிடைத்த நீட்டிப்பு, பா.ஜ.க நாடாளுமன்றத் தேர்தலுக்கு முழு நம்பிக்கையோடு தயாராகிவிட்டதை உணர்த்துகிறது. ஒன்பது மாநில சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ள பா.ஜ.க இதுவரை வகுத்த திட்டங்களில் எந்தவித மாற்றமும் இருக்கப் போவதில்லை என்பது தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com