“மக்களிடம் குறைகளை கேட்காமல் உங்கள் குறைகளைச் சொல்வதேன்” பிரதமருக்கு பிரியங்கா கேள்வி!

“மக்களிடம் குறைகளை கேட்காமல் உங்கள் குறைகளைச் சொல்வதேன்” பிரதமருக்கு பிரியங்கா கேள்வி!

கர்நாடகத்தில் வருகிற மே மாதம் 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியும், ஆட்சியமைப்பது யார் என்பதை முடிவு செய்யும் நிலையில் மதச்சார்பற்ற ஜனதாதளமும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் தேசிய கட்சியாக உருவெடுத்து வரும் ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் உள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் மற்றும் சில இடங்களில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்கள் தம்மை 91 முறை அவமதித்துப் பேசியுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தம்மை விஷப்பாம்பு என்று கூறியதையும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி, பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள ஒருவர் இதுபோன்ற தாக்குதல்களை சந்திக்கத்தான் வேண்டும். வலிகளை எப்படி தாங்கிக் கொள்வது

என்பது பற்றி நாட்டிற்காக உயிரையும் கொடுக்கத் தயார் என்று பேசிவரும் தனது சகோதரர் ராகுல் காந்தியிடம் பிரதமர் வேண்டுமானால் பாடம் கற்றுக்கொள்ளட்டும் என்று தெரிவித்தார்.

பாகல்கோட்டை மாவட்டத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “காங்கிரஸ் தலைவர்கள் 91 முறை தம்மை அவமதித்து பேசியுள்ளதாக கூறியுள்ளார். ஆனால், பா.ஜ.க.வினர் எங்கள் குடும்பத்தினரை அவமதித்து பேசியுள்ளதை ஒரு புத்தகமாகவே போடலாம்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, நாட்டுக்காக துப்பாக்கி குண்டை தாங்கிக்கொண்டு உயிரிழந்தார். ராஜீவ்காந்தியும் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தார். முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் மற்றும் மன்மோகன் சிங் இருவரும் நாட்டிற்காக கடுமையாக உழைத்தனர்.

ஆனால், மக்களிடம் குறைகளை கேட்காமல், மக்களிடம் தன்னுடைய குறைகளைச் சொல்லும் ஒரு பிரதமரை (பிரதமர் மோடியை) இப்போதுதான் பார்க்கிறேன். அவரது அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் மக்களின் பிரச்னைகளை பட்டியலிடாமல், மோடியை பலமுறை அவமதித்துள்ள சம்பவத்தை மட்டும் பட்டியலிட்டுள்ளார்.

துணிச்சல் என்றால் என்ன என்பதை பிரதமர் மோடி எனது சகோதரர் ராகுலிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். தம்மை அவமதிப்பதை ராகுல் பொருட்படுத்தவில்லை. நாட்டிற்காக உயிரைவிடவும் தயார் என்கிறார். உண்மையின்

பக்கமே இருப்பேன் என்று கூறிவருகிறார். நீங்கள் அவமதித்தாலும் அல்லது துப்பாக்கியால் சுட்டாலும் அல்லது கத்தியால் குத்தினாலும் அதற்காக அவர் அஞ்சமாட்டார் என்றார் பிரியங்கா காந்தி.

பயப்படாதீர்கள் மோடிஜி. பொது வாழ்க்கை என்று வந்துவிட்டால் இவையெல்லாம் சகஜம். இவற்றை கடந்து செல்ல துணிச்சல் வேண்டும். நான் ஒன்று உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன். நீங்கள் ஒன்றை நிச்சயம் கற்றுக்கொள்ள வேண்டும். அது என்னவெனில் மக்களில் குரலை, குறைகளை கேட்பதுதான் என்றார் பிரியங்கா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com