தி.மு.க ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் - எடப்பாடி பழனிச்சாமி உறுதி!

தி.மு.க ஆட்சிக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் - எடப்பாடி பழனிச்சாமி உறுதி!

தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச் சாராயம் மற்றும் போதைப் பொருட்கள் புழக்கம், கொலை, கொள்ளை, சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு சீர்கேடுகளை கட்டுப்படுத்தத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க சார்பில் போராடங்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளவர், அ.தி.மு.க மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

சென்ற வாரம் சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.கவினர் பேரணியாக கிளம்பி ஆளுநர் மாளிகைக்கு சென்று தி.முக ஆட்சிக்கு எதிராக புகார் மனு அளித்த நிகழ்வு, மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. சென்னை சின்னமலையில் இருந்து ஆளுநர் மாளிகை நோக்கிச் சென்ற பிரம்மாண்ட பேரணியில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் பங்கேற்றார்கள்.

பேரணியின் முடிவில் ஆளுநர் மாளிகையில் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகளோடு ஆளுநரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, கள்ளச்சாராய மரணங்கள் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு ஆளுநரிடன் கோரிக்கை மனு அளித்தனர். இதைத்தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் கிடைத்த உற்சாக வரவேற்பை தொடர்ந்து கண்டனக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும் தமிழ்நாட்டில் அனைத்து ஆட்சியர் அலுவலங்கள் முன்பாகவும், வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பாகவும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் சென்னை தவிர தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் முன்பும் அ.தி.மு,க சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

இதையெடுத்து அறிக்கை வெளியிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அரசுக்கு எதிராக அ.தி.மு.க. நடத்திய மாபெரும் போராட்டத்தின் குரல் இன்று தமிழகம் முழுவதும் ஓங்கி ஒலித்து வருகிறது. தமிழகத்தில் ஊழல்கள் மற்றும் மக்கள் விரோதச் செயல்கள் இனியும் தொடர்ந்தால், தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வரை, மக்கள் நலனுக்காக ஆர்ப்பாட்டங்களை அ.தி.முக நடத்தும் என்பதை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தி.மு.க அரசுக்கு எதிராக திடீரென்று எடப்பாடி பழனிச்சாமி வேகம் காட்டுவது கட்சி வட்டாரத்தை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. முதல்வர் வேட்பாளராக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட எடப்பாடி, தேர்தல் தோல்விக்குப் பின்னர் கட்சி பிரச்னைகளில் முடங்கிவிட்டார். இரட்டைத் தலைமையின் பிடியிலிருந்து விடுபட்டு, ஒற்றைத் தலைமையாகி கட்சியை முழுவதும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்குள் இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன.

நாடாளுமன்றத் தேர்தலை நம்பிக்கையோடு எதிர்கொள்ள வேண்டுமென்றால், எதிர்க்கட்சி தலைவராக ஸ்கோர் செய்யவேண்டும் என்று அவரது நட்பு

வட்டாரங்களிலிருந்து வந்த ஆலோசனைகளை தீவிரமாக பரீசிலித்த பின்னரே களத்தில் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இனி அடுத்தடுத்து தி.மு.க அரசுக்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் நடவடிக்கைகள்தான் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் போக்குகளை நிர்ணயிக்கும் என்று சொல்லப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com