ராகுல் மேல் முறையீட்டு வழக்கு: குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி விலகல்!
அவதூறு வழக்கில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரிக்க நியமிக்கப்பட்ட குஜராத் உயர்நீதிமன்ற பெண் நீதிபதி கீதா கோபி, விசாரணையிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை வேறு ஒரு அமர்வு விசாரிக்க வசதியாக வழக்கை தலைமை நீதிபதியிடம் ஒப்படைக்குமாறு நீதிபதி கீதா கோபி கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக இந்த அவதூறு வழக்கில் தமக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்குமாறு கீழமை நீதிமன்றத்தில் ராகுல் காந்தி வலியுறுத்தி கேட்டுக் கொண்டார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்ததை அடுத்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2019 தேர்தல் பிரசாரத்தின் போது கர்நாடகத்தில் பிரசாரம் செய்த ராகுல்காந்தி, மோடி சமூகத்தினர்கள் திருடர்கள். நீரவ் மோடி, ல்லித் மோடி, நரேந்திர மோடி என பெயரின் கடையில் மோடி என்ற அடைமொழியைக் கொண்டவர்கள் திருடர்க் என்று பேசியிருந்தார்.
இது தொடர்பாக குஜராத் நீதிமன்றத்தில் மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கில் ஒருவருக்கு இரண்டு ஆண்டு அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்றும் அவர்கள் 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டதை அடுத்து ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.
இந்த நிலையில் எம்.பி. பதவியை இழந்த ராகுல், கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சூரத் அமர்வு நீதிமன்ற்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ராகுல் கோரினார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்காத மாவட்ட அமர்வு நீதிமன்றம், தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மனு நீதிபதி கீதா கோபி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை அவசரமாக விசாரிக்க ராகுல் தரப்பு வழக்குரைஞர் பி.எஸ்.சம்பானேரி கோரினார். ஆனால், விசாரணையிலிருந்து தாம் விலகுவதாக நீதிபதி தெரிவித்தார். எனினும் அதற்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து வேறு நீதிபதி முன்பு மனுவை பட்டியலிடக்கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு குறிப்பு அனுப்ப்ப்படும் என்று ராகுலின் வழக்குரைஞர் தெரிவித்தார்.