கர்நாடக தேர்தலில் பரப்புரை மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி அழைப்பு!

கர்நாடக தேர்தலில் பரப்புரை மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு ராகுல்காந்தி அழைப்பு!

கர்நாடக தேர்தலில் பரப்புரை செய்வதற்காக ராகுல்காந்தி மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக மக்கள் நீதிமய்யம் தெரிவித்துள்ளது.

224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வரும் மே மாதம் 10-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மாநிலம் முழுவதும் காங்கிரஸ், பா.ஜ.க., ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கர்நாடக தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக தேர்தலில் பரப்புரை மேற்கொள்ள கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதனை ஏற்று கமல்ஹாசன் மே முதல் வாரம் கர்நாடகா செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கோவையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் பாராளுமன்றத் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் கோவை, சேலம் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் தொடர்பாக மக்கள் நீதிமய்யம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூட்டத்தில் கமல்ஹாசன், இன்று காலை ராகுல் காந்தி தன்னிடம் அலைபேசியில் பேசியதாகவும், அத்துடன் கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தனக்கு பிரச்சாரம் செய்ய அழைப்புக் கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டார்.

அதுபற்றிய முடிவை தான் விரைவில் அறிவிப்பதாகவும் கூறினார்.பாராளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்த வலியுறுத்திய தலைவர் கமல்ஹாசன், உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள், நியமனம் மற்றும் பூத் கமிட்டி

அமைப்பதில் தீவிரம் காட்டும் படியும் அறிவுரை கூறினார்.

கட்சியில் சிறப்பாக களப்பணிகள் செய்வோர் அங்கீகரிக்கப் படுவார்கள் , தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால் நேர்முகச் சிந்தனைகளோடு செயல்பட வேண்டிய நேரம் இது. உலகத்தில் சிறந்த சொல் “செயல்” என்பதை நாம் அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் எனவும், அரசியல் சாசனத்திற்கு ஆபத்து வருகையில் அதனைக் காப்பாற்ற கட்சி பேதங்களைக் கடந்து அனைத்து முயற்சிகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும் எனவும் பேசியதாக செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com