ஹேர்கட், டிரிம் செய்யப்பட்ட தாடி புதிய தோற்றத்தில் ராகுல் காந்தி! ஏன் தெரியுமா?
காங்கிரஸ் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி, ஒருவார பயணமாக லண்டன் சென்றுள்ளார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அவரை உரையாற்ற இருக்கிறார்.
இதையடுத்து ராகுல் ஹேர்கட் செய்துகொண்டு, தாடியையும் டிரிம் செய்து புதிய தோற்றதில் இளைஞராக காட்சியளிக்கிறார்.
மத்திய அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் முயற்சியாக ராகுல்காந்தி எம்.பி. அண்மையில் நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டார்.
கன்னியாகுமரியிலிருந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய அவரது ஒற்றுமை யாத்திரை தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா, தில்லி வழியாக ஜனவரி மாத இறுதியில் காஷ்மீர் சென்றடைந்தது. மொத்தம் 3750 கி.மீ. தொலைவுக்கு இந்த ஒற்றுமை யாத்திரை நடந்தது.
ராகுலின் இந்த யாத்திரைக்கு கல்வியாளர்கள், அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், நடிகர்கள், விளையாட்டு வீர்ர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இந்த பாதயாத்திரையின் போது ராகுல் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் டீ ஷர்ட் அணிந்திருந்தார். ஹேர்கட் செய்யாமலும் தாடியை மழிக்காமல் வளர்த்து வந்தார்.
இந்த நிலையில் கேம்ப்ரிட்ஜ் ஜட்ஜ் பிஸினஸ் ஸ்கூலில், “21 ஆம் நூற்றாண்டில் கற்றது முதல் கவனித்து வரை என்னும் தலைப்பில் ராகுல் உரையாற்ற இருக்கிறார். இதற்காக அவர் லண்டன் சென்றுள்ளார்.
முடிவெட்டிய தலை மற்றும் டிரிம் செய்யப்பட்ட தாடியுடனும் கோட் சூட் அணிந்து இருக்கும் ராகுல் காந்தியின் படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. ராகுலின் புதிய தோற்றம் என அதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.
கேம்பிரிட்ஜ் பேராசிரியர் ஸ்ருதி கபிலாவுடன் ராகுல் உரையாடலில் பங்கேற்கிறார். இந்தியா-சீனா உறவுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து தனது கருத்துக்களை வெளியிட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம் என்று ஜட்ஜ் பிஸினஸ் ஸ்கூல் தெரிவித்துள்ளது.
ராகுல் காந்தியும், “கேம்பிரிட்ஜில் நான் படித்த பள்ளியில் உரையாற்றுவதற்கு காத்திருக்கிறேன். சர்வதேச உறவுகள், அரசியல், ஜனநாயகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரமுகர்களிடம் உரையாடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று டுவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
கடைசியாக கடந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள கிறிஸ்டி கல்லூரியில், “75 வது ஆண்டில் இந்தியா” என்ற தலைப்பில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.