ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் அமளி!

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் அமளி!

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடக்க நாளிலேயே பெரும் புயலை கிளப்பியது.

லண்டனில் பேசிய பேச்சுக்காக காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

மக்களவை தொடங்கியதும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து நின்று, லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி இந்திய ஜனநாயகத்தின் மீது கேள்வி எழுப்பியதன் மூலம் இந்தியாவை இழிவுபடுத்த முயன்றுள்ளார்.

மக்களவை உறுப்பினரான ராகுல்காந்தி, லண்டன் சென்று இந்தியாவின் புகழை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளார். இந்தியாவில் ஜனநாயகமே இல்லை என்றும் இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற வெளிநாட்டு சக்திகள் முன்வர வேண்டும் என்று பேசியுள்ளார்.

ராகுலின் இந்த பேச்சுக்கு அவை கண்டனம் தெரிவிக்கிறது. ராகுல் காந்தி, தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த எம்.பி.யான ராஜ்நாத் சிங் கோரினார்.

நாடாளுமன்ற விவகாரங்கள்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும் இதே கோரிக்கையை எழுப்பினார். நெருக்கடி நிலை காலத்தில் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. அப்போது எங்கே போனது ஜனநாயகம். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மத்திய அமைச்சரவையால் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் நகலை ராகுல்காந்தி கிழித்துப் போட்டாரே அப்போது ஜனநாயகம் எங்கே போனது? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற ராஜ்நாத் சிங்கின் கோரிக்கையை ஆளும் கூட்டணி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஆதரித்தனர்.

இந்தியாவில் ஜனநாயகம் வலுவாக இருப்பது மட்டுமின்று அது மேலும் மேலும் வலுவடைந்து வருகிறது என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறினார்.

இதனிடையே காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆட்சேபம் தெரிவிக்கவே அவையில் அமளி ஏற்பட்டது.

இதையடுத்து அவையை பிற்பகல் 2 மணி வரை அவையை ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

மாநிலங்களவையில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அந்நிய மண்ணில் ராகுல் காந்தி, இந்திய ஜனநாயகத்தை சிறுமைப்படுத்தி பேசியது வெட்கக்கேடானது என்று குறிப்பிட்டார். பா.ஜ.க. அமைச்சர்கள் பலரும் இதே கோரிக்கையை வலியுறுத்தினர்.

எதிர்க்கட்சி எம்.பி.க்களும் நாடாளுமன்ற மையமண்டபத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிரதமர் மோடி அந்நிய மண்ணில் முன்னாள் தலைவர்களை அவமதித்து பேசியதாக குற்றஞ்சாட்டினர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபடவே அவை ஒத்திவைக்கப்பட்டது.

ஜனநாயகத்தை நசுக்குபவர்கள், ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள் அதை காப்பற்ற வேண்டும் என்று பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே கூறினார். ஆம் ஆத்மி, கே.சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி எம்.பி.க்கள் காங்கிரஸை ஆதரித்தனர். எதிர்க்கட்சிகளின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர். எனினும் மம்தாவின் திரிணமூலம் காங்கிரஸ் இதில் பங்கேற்கவில்லை.

முன்னதாக பா.ஜ.க. தலைவர்கள் ஒன்றுகூடி ராகுலின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்தனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், பிரகலாத் ஜோஷி, அனுராக் தாகுர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

இதேபோல எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்றுகூடி அவையில் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி கூடிப் பேசினர். புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவது, அதானி விவகாரம் குறித்து விவாதித்தனர். இதில் 16 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

அப்போது அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை தொடர்ந்து வலியுறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. புலனாய்வு அமைப்புகளை அரசு தவறாக பயன்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பாரத் ராஷ்ட்ர சமிதியினர் கூறினர்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6 ஆம் தேதி கூட்டத் தொடர் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com