ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ராகுல் காந்தி வேஸ்ட் அவர் விலைபோகமாட்டார்: பாஜக கிண்டல்!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல்காந்தி, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுக்கு எதிராக நாட்டு மக்களை ஒன்று திரட்டும் நோக்கில் நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

கடந்த செப்.7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய அவரது ஒற்றுமை யாத்திரை தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து கடந்த டிச. 23 இல் தில்லி சென்றது.

கல்வியாளர்கள், பொருளாதார நிபுணர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் அவரது ஒற்றுமை யாத்திரைக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தில்லியில் 9 நாள் ஓய்வுக்குப்பின் தில்லி ஹனுமன் கோவிலில் வழிபட்ட பின் உ.பி.யை நோக்கி ராகுல் பயணமானார். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராகுல், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால்தான் மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை வீழ்த்த முடியும். வெறும் பேச்சால் எதையும் சாதிக்க முடியாது. எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு கடுமையாக உழைத்தால்தான் பா.ஜ.க.வை ஆட்சியிலிருந்து அகற்ற முடியும் என்று கூறியிருந்தார். மேலும் இந்த யாத்திரையில் பங்கேற்குமாறு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதிக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், அவர்கள் பங்கேற்கமாட்டோம் என்று தெரிவித்துவிட்டனர்.

உ.பி. எல்லையில் ராகுல் மற்றும் தொண்டர்களை வரவேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளரும் சகோதரியுமான பிரியங்கா காந்தி, “அம்பானியும், கெளதம் அதானியும் அரசியல் தலைவர்களையும், ஊடகங்களையும் விலைக்கு வாங்கலாம். ஆனால், எனது சகோதரரை யாராலும் விலைக்கு வாங்க முடியாது. ராகுல் ஒரு போராளி. அவரின் புகழை கெடுக்க பா.ஜ.க. அரசு கோடிக்கணக்கில் செலவிட்டு வருகிறது. அவர் உண்மையைத்தான் பேசுவார். அவரது நேர்வழி. அவர் யாருக்கும் அஞ்சமாட்டார்” என்று பேசியிருந்தார்.

இந்த நிலையில் பிரியங்கா காந்தி பேச்சுக்கு பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான நிகில் ஆனந்த் பதிலடி கொடுத்துள்ளார். அம்பானியும், அதானியும் தொழில் செய்பவர்கள். அவர்கள் பொருள்களை வாங்குவார்கள், விற்பார்கள். ராகுல் காந்தி வேஸ்ட். அவரை யாரும் விலைக்கு வாங்கமாட்டார்கள். அம்பானியும், அதானியும் அவரை வாங்கி ஒருபோதும் நஷ்டப்பட மாட்டார்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com