ராகுல் காந்தி பதவி நீக்கம் - காங்கிரஸ் கட்சியினரின் அமைதி வழியில் போராட்டங்கள்!

ராகுல் காந்தி பதவி நீக்கம் - காங்கிரஸ் கட்சியினரின் அமைதி வழியில் போராட்டங்கள்!

ராகுல் காந்தி எம்.பி. தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழகத்திலும், புதுச்சேரியிலும் கடந்த இரண்டு நாட்களாக போராட்டங்கள் தொடர்கின்றன. அனைத்துப் போராட்டங்களிலும் குறைவான தொண்டர்களே பங்கேற்கும்படியான அமைதியான போராட்டங்களே நடந்து வருகின்றன.

மாவட்ட தலைநரங்களிலும் வித்தியாசமான முறையில் அமைதி வழி போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. கோவை பாப்பநாயக்கன் பாளையம் காந்தி சிலை முன்பு காங்கிரஸ் கட்சியினர் கண்களில் கருப்பு துணி கட்டி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவானந்தா காலனியில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் தோளில் கருப்பு துண்டு அணிந்து காந்தியின் உருவப்படத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தொண்டாமுத்தூரில் நடந்த போராட்டத்தில் தொண்டாமுத்தூர், சூலூர் மற்றும் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

புதுச்சேரியிலும் போராட்டம் நடந்தது. நெல்லித்தோப்பு வட்டார காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பாத யாத்திரை, நெல்லித்தோப்பு காராமணிக்குப்பம் வழியாக சென்று ராஜிவ்காந்தி சிலை சதுக்கத்தில் நிறைவடைந்தது. ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை அருகே ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் வாயில் கருப்பு துணி கட்டி மவுன அஞ்சலி போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் ராஜ்காட்டில் காந்தி நினைவிடத்தில் நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சட்டமன்றத்தில் நாளை இரவு உள்ளிருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

ராகுல் காந்தி தகுதி நீக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து நாளை சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்க வேண்டும். ராகுல் காந்திக்கு ஆதரவாக சட்டமன்றத்தின் வேலை நேரத்தில் பேசவேண்டும். சட்டமன்றத்தை விட்டு வெளியே வராமல், இரவு உள்ளிருப்பு போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்'

என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் குழு தலைவர் செல்வப் பெருந்தகை டிவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

ராகுல் காந்தி பதவி நீக்கம் செய்யப்பட்ட செய்தி வெளியானதும் உடனே வயநாடு தொகுதி காலியாகிவிட்டதாகவும் அறிவிப்பு வந்தது. நாடெங்கிலும உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். தமிழகத்திலும் காங்கிரஸ் தொண்டர்கள் ரயில் மறியலில் இறங்கியதாக செய்திகள் வந்தன. அடுத்தடுதது போராட்டங்கள் வலுவடையும். ஆளுநர் மாளிகை நோக்கி பெரிய அளவில் பேரணி நடைபெறும் என்றெல்லாம் எதிர்பார்க்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் கூட்டணிக்கட்சியான தி.மு.க ஆட்சியில் இருப்பதால் பேரணியோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு தடை விதிக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதென்று தமிழக காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருப்பது அரசியல் சூழலில் வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com