ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு எதிரொலி - நான்காவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

ராகுல் காந்தியின் லண்டன் பேச்சு எதிரொலி - நான்காவது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று குரல் எழுப்பாத பா.ஜ.க தலைவர்களே இல்லை. பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளரான ரவி சங்கர் பிரசாத் முதல் உள்துறை அமைச்சர் வரை ராஜ்நாத் சிங் அத்தனை பிரமுகர்களும் ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

மன்னிப்பு மட்டும் போதாது; ராகுல் காந்தியை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி பிரக்யா தாக்கூரும் களத்தில் இறங்கியிருக்கிறார். கடந்த நான்கு நாட்களாக நாடாளுமன்றத்தை செயல்படவிடாமல் பா.ஜ.க எம்.பிக்கள் முடக்கியிருக்கிறார்கள். ஆளுங்கட்சியினரே நாடாளுமன்றத்தை முடக்குவது இதுதான் முதல் முறை.

ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழைய முடியும் என்பது சரிதான். ராகுல் காந்தியின் லண்டன் உரை, நிச்சயம் அவருக்கு சறுக்கலை தந்திருக்கிறது. இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று பா.ஜ.கவினர் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். பதிலடி தரமுடியாத காங்கிரஸ் கட்சியினரோ, அதானி விஷயத்தை கையிலெடுத்திருக்கிறார்கள்.

சமீபத்தில் ஒருவார பயணமாக லண்டனுக்கு பயணமான ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுடன் உரையாடினார். உள்ளூர் எம்.பிக்கள் மத்தியில் நடப்பு அரசியல் பற்றி விரிவாக பேசியிருந்தார். பிக்டேட்டா உள்ளிட்ட நவீன தொழில்நுட்பம் தொடங்கி, இந்திய சீனா உறவுகள், லண்டனுக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் உள்ள நீண்ட நெடிய தொடர்பு குறித்தும் பேசினார்.

இந்தியாவில் ஜனநாயகம் மோசமான நிலையில் இருப்பதாகவும், நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பல தடைகள் இருப்பதாகவும் பேசியதுதான் சர்ச்சையின் ஹைலைட். ஆர். எஸ்.எஸ் அனைத்து அதிகார மையங்களிலும் ஊடுருவியிருப்பதாகவும், உலகத்திற்கே முன்னுதாரணமாக இருந்த ஜனநாயக நாடான இந்தியாவில் தற்போது நிலைமை மாறியிருப்பதாகவும் உக்ரைன் எல்லையில் பதட்டம் நிலவுவது போல் இந்திய எல்லையான லடாக், அருணாச்சல பிரதேசம் போன்ற எல்லைப் பகுதிகளிலும் பதட்டம் நிலவுவதாக மிகைப்படுத்தி பேசியிருக்கிறார்.

ராகுல் காந்தியும் சர்ச்சையை எதிர்பார்த்திருப்பது போல் தெரிகிறது. பிரதமர் பதவிக்கான வேட்பாளராக பல கட்சிகளால் முன்னெடுக்கப்படும் ராகுல் காந்தி, தன்னுடைய பேச்சு சர்ச்சையாகியிருந்த நிலையில் விளக்கம் அளித்திருக்க வேண்டும். தனக்கு எந்தவொரு உள்நோக்கமும் இல்லையென்று உடனே தெளிவுப்படுத்தியிருக்க வேண்டும்.

என்னுடைய பேச்சை தவறாக அர்த்தப்படுத்திவிட்டார்கள் என்று விளக்கம் தராவிட்டாலும் பா.ஜ.கவினரின் விமர்சனங்களை.அமைதியாக கடந்து போயிருக்கலாம். ஆனால், நாடாளுமன்றத்தில் மட்டுமே என்னுடைய பேச்சு குறித்து, விளக்கமளிப்பேன் என்று பிடிவாதமாக இருப்பதுதான் அவர் மீதான் கடுமையான விமர்சனங்களுக்கு காரணமாகிவிட்டது.

ராகுல் காந்தியின் லண்டன் பேச்சில் சில சுவராசியமான பகுதிகளும் இருந்தன. பாரத் ஜோடோ யாத்திரை அனுபவங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். 4 ஆயிரம் கி.மீ, 12 மாநிலங்கள் 6 மாதம் என்று ராகுல் காந்திக்கு கிடைத்த அனுபவம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. அதை இன்னும் ஹைலைட் செய்திருக்கலாம்.

என்னதான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தாலும், தனிப்பட்ட வகையில்தான் லண்டனுக்கு பயணம் செய்திருக்கிறார். அவரது பேச்சு சர்ச்சையானதும், தனி நபராக விளக்கம் தந்திருக்கலாம். 'Learning to Listen in the 21st Century' என்பதுதான் அவருடைய உரையின் தலைப்பு. பேச்சை குறைத்துவிட்டு, அடுத்தவர் பேச்சை கேட்க ஆரம்பியுங்கள் என்பதுதான் அவர் சொல்ல வந்த விஷயம். இது பா.ஜ.கவினருக்கு மட்டுமல்ல காங்கிரஸ் கட்சியினருக்கும் பொருந்தும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com