பாலியல் வன்முறை குறித்த கருத்துக்கு விளக்கம் கோரிய டெல்லி காவல்துறையின் நோட்டீஸுக்கு ராகுல் காந்தியின் பதில்!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஜனவரி மாதம் தனது, பாரத் ஜோடோ யாத்திரையின் போது,“பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள்” எனும் கருத்தை வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்து விளக்கம் கேட்டு அது நடந்து 45 நாட்களுக்குப் பிறகு டெல்லி காவல்துறை அதிகாரிகள் ராகுல்காந்தியின் வீட்டுக்கு 2 முறைக்கும் மேலாக நேரில் சென்ற செயல் ராகுல் காந்தியை வியப்படைய வைத்ததாக ஞாயிறு அன்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த செயல்முறையில் ஐந்து நாட்களில் மூன்றாவது முறையாக டெல்லி காவல்துறைக் குழு அவரது கதவைத் தட்டிய சில மணிநேரங்களுக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் தான் வெளியிட்ட கருத்தை ஒட்டி 10 அம்சங்கள் அடங்கிய பதிலை அளித்தார்.
ஜனவரி 30 ஆம் தேதி அவர் கூறிய மேற்சொன்ன கருத்துக்கள் தொடர்பாக டெல்லி காவல்துறையினர் எழுப்பிய கேள்விகளுக்கு விரிவான பதிலை அளிக்க அவர் 8 முதல் 10 நாட்கள் அவகாசம் கோரினார் என்றும் அந்த காவல்துறை வட்டாரம் தெரிவித்தது.
காவல்துறையின் சிறப்பு ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகர் ப்ரீத் ஹூடா தலைமையிலான போலீஸ் குழு காலை 10 மணியளவில் ராகுல் காந்தியின் 12, துக்ளக் லேன் இல்லத்திற்கு வந்து, இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு சுமார் 1 மணி அளவில் காங்கிரஸ் தலைவரைச் சந்திக்க முடிந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காவல்துறையின் கூற்றுப்படி, பாரத் ஜோடோ யாத்திரையின் போது ஸ்ரீநகரில் வைத்து ராகுல் காந்தி "பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன்" என்று கூறினார், மேலும் அவரது யாத்திரை டெல்லி வழியாகவும் சென்றதால், பாதிக்கப்பட்ட யாராவது காங்கிரஸ் தலைவரை அணுகினார்களா என்பதை காவல்துறையினர் அறிய விரும்பினோம். அப்படியான சம்பவங்கள் ஏதேனும் சமீபத்தில் இங்கு நடந்திருந்தால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்க வசதியாக ஒரு விசாரணையைத் தொடங்கலாம் என்ற நோக்கிலேயே ராகுல் காந்தியிடம் விளக்கம் கோரப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
ராகுல் காந்தியிடம் புகார்கள் ஏதேனும் வந்திருந்தால் அப்படி "பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு போலீசார் அவரிடம் கேட்டுள்ளனர், இதனால் சம்மந்தப்பட்டவர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்க முடியும்" என்று ஒரு அதிகாரி கூறினார்.
மாலை 4 மணிக்கு முன்னதாகவே விளக்கமான பதிலை அனுப்பிய காந்தி, காவல்துறையின் நடவடிக்கையை "முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு" என்று விமர்சித்திருப்பதோடு, அதானி விவகாரத்தில் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எடுத்த நிலைப்பாட்டிற்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்று கேள்வி எழுப்பியும் உள்ளதாகத் தகவல்.