வெளிநாட்டில் இந்தியாவை இழிவுபடுத்தி வருகிறார் ராகுல், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கடும் கண்டனம்!
இங்கிலாந்தில், கேம்பிரிட்ஜில் ஜட்ஜ் பிஸினஸ் ஸ்கூலில் ராகுல்காந்தி கூறிய கருத்துக்களுக்கு அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த் விஸ்வ சர்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் புகழை கெடுக்கும் வகையில் அவர் பேசினாலும், அவரது பேச்சு வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தும் வகையிலேயே அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பாரத் ஜடோ யாத்திரையின் (ஒற்றுமையாத்திரை) போது சில பயங்கரவாதிகளை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி. அப்படியானால், அது குறித்து அவர் ஏன் பாதுகாப்பு பிரிவினருக்குத் தெரிவிக்கவில்லை என்று ஹிமந்தா கேள்வி எழுப்பினார்.
காஷ்மீரில் பயங்கரவாதிகளை பார்த்ததாக ராகுல் கூறுகிறார். அவர்கள் தன்னை குறிவைக்கவில்லை என்பதும் அவருக்குத் தெரியும். அப்படியிருந்தும் அவர் பயங்கரவாதிகள் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு பிரிவினருக்கு ஏன் தகவல்
தெரிவிக்கவில்லை. காங்கிரஸாருக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளதா? அல்லது பயங்கரவாதிகள் ராகுலுக்கு பாதுகாப்பு அளிக்கிறார்களா? என்றும் அவர் கேட்டார்.
புல்வாமா கார் குண்டு தாக்குதலில் 40 வீர்ர்கள் கொல்லப்பட்டதாக ராகுல் கூறி வருகிறார். இதன் மூலம் அவர் ஜவான்களை சிறுமைப்படுத்தியுள்ளார். உண்மையில் அது குண்டுவெடிப்பு அல்ல, பயங்கரவாத தாக்குதல். ஆனாலும் இந்த தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதை சொல்ல அவர் மறுக்கிறார். அப்படியானால் பயங்கரவாதிகளுடன் காங்கிரசுக்கு மறைமுகத் தொடர்பு உள்ளதா என்று ஹேமந்த விஸ்வ சர்மா கேள்வி எழுப்பினார்.
முதலில் வெளிநாட்டு ஏஜெண்டுகள் எங்களை குறிவைத்தார்கள். இப்போது நம்நாட்டைச் சேர்ந்தவர்களே வெளிநாட்டு மண்ணில் எங்களை குறிவைக்கிறார்கள். ராகுல் காந்தியில் பேச்சு, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்துவதாகும். பிரதமரை இழிவுபடுத்துவதாக எண்ணி நாட்டையே அவர் இழிவுபடுத்தி பேசியுள்ளார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.