எதிர்க்கட்சி கூட்டணி:லாலுவிடம் ராகுல் முக்கிய ஆலோசனை!

ராகுல், லாலு
ராகுல், லாலு

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெள்ளிக்கிழமை இரவு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சித் தலைவர் லாலு பிரசாத் யாதவை திடீரென சந்தித்துப் பேசினார். “இந்தியா” எதிர்க்கட்சி கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது குறித்து ராகுல், லாலுவிடம் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மோடி குடும்பப் பெயர் குறித்து 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட அவதூறு வழிக்கில் ராகுலுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்தும், அவர் மீண்டும் மக்களவை உறுப்பினராவதற்கு வழிவகுக்கும் வகையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில் லாலுவை ராகுல் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தில்லியில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சி எம்.பி.யும், லாலுவின் மகளுமான மிஸா பாரதி வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. ராகுல் லாலுவை சந்தித்தபோது அவரது மகனும் பிகார் துணை முதல்வருமான தேஸ்வி யாதவும் உடன் இருந்தார். ராகுலுடன் காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி.வேணுகோபாலும் சென்றிருந்தார்.

இந்த சந்திப்பின்போது லாலு, ராகுல் இருவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினர். “இந்தியா" கூட்டணியை முன்னெடுத்துச் செல்வது உள்ளிட்ட நாட்டின் அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லாலு பிரசாத் யாதவிடம், ராகுல்காந்தி உடல்நலம் விசாரித்தார். பிகாரில் ஐக்கிய ஜனதாதள கட்சித் தலைவரும் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அரசு அமைத்துள்ளனர். பிகார் அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் பேசியதாக கூறப்படுகிறது.

மும்பையில் ஆகஸ்டு 31 மற்றும் செப்டம்பர் 1 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் கூட்டணியின் (இந்தியா கூட்டணி) மூன்றாவது ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் லாலுவை, ராகுல் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராகுல், லாலு இருவரும் சந்தித்துப் பேசினர். பேச்சுவார்த்தை சுமுகமாகவே இருந்தது. தேஜஸ்வி மற்றும் லாலுவின் குடும்பத்தினர் அப்போது உடனிருந்தனர் என்று டுவிட்டர் மூலம் தகவல் வெளியிட்டுள்ளார்.

சமூக நீதி காவலரான லாலு பிரசாத் நம் அனைவருக்கு ஒரு உத்வேகமாக இருக்கிறார். அவரது வழிகாட்டுதல்கள், அரவணைப்பு பெற நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். இந்தியா கூட்டணிக்கு பிகார் உரிய ஆதரவு அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்று ராகுல் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com