நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கொடுங்கள் மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

நாடாளுமன்றத்தில் பேச அனுமதி கொடுங்கள் மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

லண்டனில் இந்திய ஜனநாயகம் குறித்து பேசியது தொடர்பாக பதிலளிக்க நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டு மக்களவைத் தலைவருக்கு ராகுல்காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

இங்கிலாந்துக்கு பயணம் சென்றுவந்த ராகுல் காந்தி எம்.பி. கடந்த வாரம் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை சந்தித்தார். அப்போது இந்த கடிதத்தை கொடுத்துள்ளதாக்க் கூறப்படுகிறது.

ராகுல் காந்தி, வெளிநாட்டு மண்ணில் இந்தியாவையும், இந்திய ஜனநாயகத்தையும் இழிவுபடுத்திவிட்டதாகவும் எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கோரி வருகின்றனர். இந்த சூழலில் ராகுல்காந்தி தனது லண்டன் பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க விரும்புவதாக காங்கிரஸார் தெரிவித்தனர்.

சமீபத்தில் லண்டன் சென்றிருந்த ராகுல் காந்தி எம்.பி., அங்கு பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் நடந்து வருகிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே பேசினாலும் மைக்குகள்

அணைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஜனநாயகம் இருக்கிறதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்று பேசியதாக கூறப்படுகிறது.

இதனிடையே பா.ஜ.க.வினர், ராகுல்காந்தி வெளிநாட்டில் பேசுகையில் இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இவ்விஷயத்தில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும் குற்றஞ்சாட்டியிருந்தனர். வெளிநாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, தாம் ஒருபோதும் இந்தியாவை இழிவுபடுத்தும் வித்த்தில் பேசவில்லை என்று கூறியிருந்தார்.

தமது லண்டன் பேச்சு குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக கூறிய ராகுல் காந்தி, இது தொடர்பாக அனுமதி கேட்டு மக்களவைத் தலைவருக்கு கடிதம் எழுதியிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஒருபுறம் அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசை கோரி வருகின்றன. மற்றொரு புறம் வெளிநாட்டில் இந்தியாவை இழிவுபடுத்தி பேசிய ராகுல்காந்தி, மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிவருகிறது. பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே நடைபெறும் இந்த பனிப்போர் காரணமாக கடந்த ஒருவாரமாக நாடாளுமன்றம்

செயல்படாமல் முடங்கிப் போயுள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தின் தேக்கநிலையை போக்கவேண்டுமானால் ராகுல் நிபந்தனைகளற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்று மூத்த மத்திய அமைச்சர் ஹரிதீப் சிங் புரி வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்டம் மார்ச் 13 ஆம் தேதி தொடங்கிய போதிலும் இரு அவைகளும் எந்த அலுவலும் நடைபெறாமல் செயலிழந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com