சந்திரபாபுவுக்கு ஆல் த பெஸ்ட் சொன்ன ரஜினி!

சந்திரபாபுவுக்கு ஆல் த பெஸ்ட் சொன்ன ரஜினி!

ஐதராபாத் நகரத்தின் வளர்ச்சியின் சந்திரபாபு நாயுடுவின் பங்கு பற்றி சூப்பர் ஸ்டார் ரஜினி பேசியது அக்கட தேசத்து அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதையெடுத்து ரஜினியை தொடர்பு கொண்டு விமர்சனங்கள் குறித்து தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார், சந்திரபாபு. அதெல்லாம் இருக்கட்டும். உண்மையை யாரும் மறைக்க முடியாது. ஆல் த பெஸ்ட் சொல்லி அசத்தியிருக்கிறார், சூப்பர் ஸ்டார்.

சென்ற வாரம் விஜயவாடாவில் நடந்த என்.டி.ஆர் நூற்றாண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரஜினி, என்.டி. ஆர் பற்றி பேசினார். பின்னர் மேடையில் இருந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசியது ஆளும்தரப்பினர் மத்தியில் எரிச்சலை உண்டாக்கியது. கடந்த 20 ஆண்டுகளில் ஐதராபாத் நகரம், மிகப்பெரிய நகரமாக வளர்ச்சியடைந்தமைக்கு சந்திரபாபு நாயுடுவே காரணம் என்று ரஜினி பாராட்டியிருந்ததை ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் ரசிக்கவில்லை.

ரஜினி குறிப்பிட்ட விஷயத்தில் எந்த தவறும் இல்லை. அவர் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திர முதல்வராக சந்திரபாபு நாயுடு இருந்தபோது, தலைமை செயல் அதிகாரியாகவே நடந்து கொண்டார். பில் கேட்ஸ் உள்ளிட்ட பல பன்னாட்டு பிரபலங்களை ஹைதராபாத்துக்கு அழைத்து வந்து முதலீடு செய்ய காரணமாக இருந்தார். மைக்ரோசாப்ட், ஆரக்கிள், ஐ.பி.எம் என்று பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கிளை தொடங்க சந்திரபாபு நாயுடு தந்த ஊக்கம்தான் காரணம்.

சந்திரபாபு நாயுடு காலத்தில்தான் ஹைதராபாத் ஐ.டி துறையில் வளர்ச்சியடைந்தது. தென்னிந்தியாவில் பெங்களூருக்கு இணையாக போட்டி போட்டுக்கொண்டு ஐ.டி துறையில் முக்கியமான நகரமாக உருவெடுத்தது. அரசியலைக் கடந்து இதை பார்க்க வேண்டும். சந்திரபாபு நாயுடுவை பிடிக்காவிட்டாலும், உண்மையை யாரும் மறுக்கமுடியாது என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினி மீதான விமர்சனங்களுக்கு தெலுங்கு தேச கட்சியின் நிர்வாகிகள் பதிலடி தந்து வருகிறார்கள். ரஜினி சிங்கம் போல் சிங்கிளாக வந்து உண்மையை பேசிவிட்டு சென்றிருக்கிறார். அவர் ஒரு முறை சொன்னால் நூறு முறை சொன்னதாக அர்த்தம் என்றெல்லாம் ரஜினியின் வசனங்களை முன்வைத்து சந்திரபாபு நாயுடு குறித்து அவர் பேசியதை முன்வைத்து விளக்கக்கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

ரஜினி மீது ரோஜா கடுமையான விமர்சனத்தை முன்வைத்ததும் உடனே தெலுங்கு தேச கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு டிவிட்டரில் பதிலடி தந்திருந்தார். ரஜினி எதுவும் தவறாக பேசிவிடவில்லை. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசின் மீது அவர் எந்த

குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை. அதுவொரு அரசியல் மேடையும் அல்ல. ரஜினியின் நடுநிலையான பேச்சை, அரசியல் சர்ச்சையாக்கிவிட்டார்கள்.

தேவையில்லாமல் ரஜினியை விமர்சிப்பவர்களை ஜெகன்மோகன் ரெட்டி கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். இது போன்ற விமர்சனங்களை ஆந்திர மக்கள் விரும்ப மாட்டார்கள். தரக்குறைவாக விமர்சித்தவர்களை மன்னிக்கவும் மாட்டார்கள். ரோஜா உள்ளிட்டோர் ரஜினியை விமர்சித்ததற்கு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அதில் தெரிவித்திருந்தார்.

சந்திரபாபு நாயுடுவின் பதிலடியைத் தொடர்ந்து சர்ச்சை இன்னும் தீவிரமானது. இது குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பதிலளிக்கவில்லையென்றாலும் அவரது கட்சியைத் சேர்ந்தவர்கள் ரஜினியை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள். ரஜினி, ஆந்திர அரசியலில் இறங்குப்போவதாகவும், தெலுங்கு தேசம் கட்சியோடும், பவன் கல்யாணின் கட்சியோடும் இணைந்து கூட்டணி அமைக்க முயற்சி செய்து வருவதாகவும் வதந்திகள் பரவ ஆரம்பித்துள்ளன.

இந்நிலையில் ரஜினியை தொலைபேசியின் தொடர்பு கொண்ட சந்திரபாபு நாயுடு, நடந்த சர்ச்சைகளுக்கு தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார். இது குறித்து தன்னுடைய கட்சி நிர்வாகிகள் பேசிய விஷயங்களை குறிப்பிட்ட சந்திரபாபு நாயுடு, ரஜினி மீதான ஆளுங்கட்சியின் விமர்சனங்கள் தன்னை காயப்படுத்தியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த ரஜினி, அதெல்லாம் கவலைப்படாதீங்க.. அரசியலில் இதெல்லாம் சகஜம். என் மீதான விமர்சனங்கள் பற்றி எந்நாளும் நான் கவலைப்பட்டதில்லை. யார் என்ன சொன்னாலும், உண்மையை மறைக்க முடியாது. உங்கள் மீது எனக்கு உள்ள மரியாதையையும் குறைக்க முடியாது என்றும் தெரிவித்திருக்கிறார்.

நெகிழ்ந்து போன சந்திரபாபு நாயுடு, தன்னுடைய ஆதரவாளர்களிடம் ரஜினி பற்றி உயர்வாக பேசி வருகிறாராம். இந்நிலையில் ஐதராபாத்தின் வளர்ச்சி பற்றி ரஜினி பேசியது ஜெகன்மோகன் வட்டாரங்களை கதிகலங்க வைத்திருக்கிறது. ஐதராபாத்திற்கு இணையாக அமராவதியை உருவாக்குவோம் என்று முன்வைத்த கோஷமெல்லாம் என்ன ஆனது என்று ஆளுங்கட்சி வட்டாரத்திலேயே சலசலப்பு எழுந்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com