தில்லி நிர்வாக அதிகார திருத்த மசோதா நிறைவேறியது!

தில்லி நிர்வாக அதிகார திருத்த மசோதா நிறைவேறியது!

தில்லி நிர்வாக அதிகார திருத்த மசோதா திங்கள்கிழமை மாநிலங்களையில் நீண்ட விவாதத்துக்கு பின் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 102 வாக்குகளும் பதிவாகின.

இந்த மசோதாவுக்கு மக்களவையில் கடந்த வெள்ளிக்கிழமை குரல் வாக்கெடுப்பு  மூலம் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதால் குடியரசுத் தலைவரின் சட்ட ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும்.

யூனியன் பிரதேசமான தில்லி அரசில் குரூப்-ஏ அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றத்துக்கு ஆணையம் அமைக்க மத்திய அரசு கடந்த மே மாதம் அவசரச் சட்டம் கொண்டுவந்த்து. காவல்துறை, பொது அறிவிப்பு, நில அதிகாரம் ஆகியவை தவிர பிறதுறைகளில் அதிகாரம் செலுத்துவதற்கான உரிமை தில்லி அரசுக்கே உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த ஒருவாரத்துக்குப் பின் இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இதன் மூலம் தில்லி அரசு அதிகாரிகள் நியமனம், பணியிட மாற்ற முடிவு எடுக்கும் அதிகாரம் தில்லி துணைநிலை ஆளுநருக்கே மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அவசர சட்டத்துக்கு மாற்றான தில்லி நிர்வாக அதிகார திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் பலத்த எதிர்ப்புக்கு இடைய கடந்த வாரம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த மசோதாவை, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.

அவையில் விவாதத்தை தொடங்கிவைத்துப் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் அபிஷேக் சிங்வி, சட்டத்துக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாகவும் பழிவாங்கும் நோக்கில் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறினார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் ப.சிதம்பரம் பேசுகையில் இந்த சட்டம் அரசமைப்புக்கு எதிரானது என சட்ட அமைச்சகத்துக்கு தெரியும் என்றார். மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசுகையில், ஜனநாயகத்தின் ஆணிவேரை பாதிக்கும் இந்த மசோதா, சமூகநீதி, மதச்சார்பின்மை மற்றும் கூட்டாட்சிக்கு எதிரானது என்றார்.

ஆம் ஆத்மி கட்சியின் ராகவ் சத்தா இதுபோன்ற சட்டவிரோதமான மசோதா மாநிலங்களவையில் இதுவரை தாக்கல் செய்யப்படவில்லை என்றார். தெலங்கானா முதல்வர் சந்திர சேகர ராவின் பாரத் ராஷ்டிர சமிதி உறுப்பினர்கள் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விவாதத்துக்கு பதிலளித்துப் பேசிய அமித்ஷா, திறமையான, ஊழலற்ற நிர்வாகம் ஆகியவற்றுக்காக மட்டுமே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. பிற மாநிலங்களைவிட தில்லி தனித்துவமானதாகும். மத்திய அரசின் அதிகாரங்களை தில்லி அரசு அபகரிப்பதை தடுக்கவே இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்ற உத்தரவு எதுவும் மீறப்படவில்லை என்றார்.

இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும் எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து மசோதா நிறைவேறியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com