முஸ்லிம் பெண்களுக்கு ராக்கி கட்டுங்கள்:பிரதமர் மோடி வேண்டுகோள்!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

க்ஷாபந்தன் நேரத்தில் முஸ்லிம் பெண்களுக்கு ராக்கி கட்டி சகோதரத்துவதை உணர்த்துங்கள் என்று பா.ஜ.க. தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம், ஒடிஸா, ஜார்க்கண்ட், மாநிலங்களைச் சேர்ந்த பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

முஸ்லிம் பெண்களை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதித்து முஸ்லிம் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தது தமது அரசுதான் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

2024 ஆண்டு மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்களிடம் அவர் பேசினார். அப்போது மத்தியில் ஆளும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் வளர்ச்சித் திட்டங்களையும், பல்வேறு சமூகத்தினருக்கான நல்வாழ்வு திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்லுமாறும் அவர் எம.பி.க்களை கேட்டுக் கொண்டார்.

சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடமும் நாம் தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, முஸ்லிம் ஆண்கள், திடீரென தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தமது அரசு முற்றுப்புள்ளி வைத்ததை சுட்டிக்காட்டினார். மத்திய அரசின் இந்த முடிவினால் முஸ்லிம் பெண்கள் பாதுகாப்பாக உணர்வதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி ரக்ஷா பந்தன் வருகிறது. இந்த சமயத்தில்  சிறுபான்மை பிரிவு மக்களை குறிப்பாக, முஸ்லிம் மக்களை எம்.பி.க்கள் சந்தித்து அவர்களுக்கு ராக்கி கட்டி சகோதரத்துவத்தை உணர்த்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முஸ்லிம் பெண்கள் திருமண பாதுகாப்புச் சட்டம் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிதத்துடன், அதை மீறும் முஸ்லிம் கணவருக்கு சிறைத்தண்டனை பெற்றுத்தரவும் சட்டம் வகை செய்கிறது.

மேலும் சமீபத்தில் மன்கிபாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்த ஆண்டு 4,000 முஸ்லிம் பெண்கள் தனியாக ஹஜ் யாத்திரை செல்ல வழிவகை செய்யப்பட்டு ஹஜ் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள் “இந்தியா” என்ற பெயரில் ஒரு கூட்டணியை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற பெயரில் முன்பு ஊழல் ஆட்சி நடத்தியவர்கள் இப்போது பெயரை மாற்றிக்கொண்டுள்ளனர். எனினும் மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி நாட்டில் உள்ள பிராந்தியங்களை பல்வேறு பகுதிகளாக பிரித்து தேசிய முன்னணியைச் சேர்ந்த, சராசரியாக 40 எம்.பி.க்கள் கொண்ட குழுவிடம் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பேசி வருகிறார். இந்த நடவடிக்கை வரும் 10 ஆம் தேதி வரை தொடரும் எனத் தெரிகிறது.

சமீபத்தில் மேற்கு உத்தரப்பிரதேச பகுதி எம்.பி.க்களிடம் பேசிய பிரதமர் மோடி, அயோத்தி விவகாரத்தை மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் மக்களை நேரில் சந்தித்து உரையாடுங்கள். அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேளுங்கள். அவற்றை தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்துங்கள். மத்திய அரசின் சாதனைகளை அவர்களிடம் எடுத்துக்கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com