மக்களவைத் தேர்தலில் சிந்தியாவை எதிர்க்க தயார்: திக்விஜய்சிங்!

மக்களவைத் தேர்தலில் சிந்தியாவை எதிர்க்க தயார்: திக்விஜய்சிங்!

காங்கிரஸ் கட்சி மேலிடம் கட்டளையிட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சரும் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான ஜோதிராதித்ய சிந்தியாவை எதிர்த்து போட்டியிடத் தயார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருக்கும் தொகுதிகளில் அங்கு கட்சியை பலப்படுத்தும் நோக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் திக்விஜய் சிங்.

இந்த நிலையில் சீனி தொகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய திக்விஜய் சிங், “நான் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறேன். எனவே நான் தேர்தலில் போட்டியிடத் தேவையில்லை. நான் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்களில் ஒருவன். கட்சியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பவன். காங்கிரஸ் மேலிடம் கட்டளையிட்டால் வரும் மக்களவைத் தேர்தலில் குணா தொகுதியில் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. தலைவர்களில் ஒருவருமான ஜோதிராதித்ய சிந்தியா எதிர்த்துப் போட்டியிட தயாராக இருக்கிறேன்.

என்னுடைய மக்களவைத் தொகுதி ராஜ்கர்தானே தவிர குணா அல்ல. கடந்த முறை போபால் தொகுதியில் போட்டியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டேன். நான் காங்கிரஸ் கட்சியின் தொண்டன். கட்சி என்ன சொன்னாலும் அதை ஏற்று செயல்படத் தயாராக இருக்கிறேன் என்றார் முன்னாள் முதல்வரான திக்விஜய் சிங்.

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலில் போபால் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திக்விஜய் சிங், பா.ஜ.க.வின்

பிரக்யா சிங் தாகுரிடம் தோற்றுப்போனார். சிந்தியா, குணா தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

ஜோதிராதித்ய சிந்தியாவும், திக்விஜய் சிங்கும் மாநில காங்கிரஸில் போட்டி அரசியல் நடத்தி வந்தவர்கள். கடந்த 2020 ஆம் ஆண்டு சிந்தியா காங்கிரஸிலிருந்து ராஜிநாமாச் செய்துவிட்டு பா.ஜ.க.வில் சேர்ந்தார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு காலி பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு கடிதங்களை வழங்குவதை திக்விஜய் சிங் விமர்சித்துள்ளார். 9.5 லட்சம் அரசு வேலையிடங்கள் காலியாக உள்ள நிலையில் வெறும் 45,000 பேருக்கு மட்டுமே வேலை நியமன கடிதங்களை தந்துள்ளது வேடிக்கையாக இருக்கிறது. காலியிடங்களைக்கூட அவர்களால் முழுமையாக பூர்த்தி செய்ய முடியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com