புகார்களுக்கு பதில் கூற தயாராக இருக்கிறேன்: ராகுல் காந்தி; மன்னிப்பு கேட்காமல் பேசவிடமாட்டோம்: பா.ஜ.க!

புகார்களுக்கு பதில் கூற தயாராக இருக்கிறேன்: ராகுல் காந்தி; மன்னிப்பு கேட்காமல் பேசவிடமாட்டோம்: பா.ஜ.க!

தன்மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பதிலளிக்க தயாராக இருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ள நிலையில், லண்டனில் இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தி பேசியதற்காக மன்னிப்பு கேட்காதவரையில் நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கமாட்டோம் என்று பா.ஜ.க.வினர் கூறிவருகின்றனர்.

அதானி முறைகேடு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், வெளிநாட்டு மண்ணில் இந்திய ஜனநாயகத்தை இழிவுபடுத்தி பேசிய ராகுல்காந்தி மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க.வினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த விவகாரங்களால் நாடாளுமன்றத்தில் கூச்சல், குழப்பம் அமளி ஏற்பட்டதால் அவை முடங்கியுள்ளது.

லண்டனில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய ராகுல்காந்தி, இந்தியாவில் ஜனநாயகம் தாக்குதலுக்குள்ளாகி இருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கப்படுவதில்லை. அப்படியே பேச அனுமதிக்கப்பட்டாலும் மைக்குகள் அணைக்கப்பட்டு விடுகின்றன என்று கூறியிருந்தார்.

இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்றம் கூடியதும் அவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது. அவையில் உறுப்பினர்களின் மைக்குகள் செயல்படவில்லை. இதையடுத்து மோடியின் நண்பருக்காக மைக்குகள் அணைக்கப்பட்டுள்ளன என்று காங்கிரஸ் டுவிட்டரில் செய்தி வெளியிட்டது.

ராகுல்காந்தி இரண்டாவது நாளாக இன்று நாடாளுமன்றத்துக்கு வந்திருந்தார். ஆனால், அமளி ஏற்பட்டதால் அவை 20 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. தன் மீதான புகார்களுக்கு பதிலளிக்க விரும்புவதாக ராகுல்காந்தி கூறினார். ஆனால், பா.ஜ.க.வினர், ராகுல் மன்னிப்புக் கேட்டால்தான் அவரை பேச அனுமதிப்போம் என்று பிடிவாதமாக கூறிவிட்டனர்.

வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை தரக்குறைவாக ராகுல் விமர்சித்துள்ளதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன்னதாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்ஸாத் பூனாவாலா.

இந்திய இறையாண்மை குறித்து அவர் கேள்வி எழுப்பியதும், ஜனநாயகத்தை மீட்க உதவுமாறு

வெளிநாட்டு சக்தியினரை அவர் கேட்டுக் கொண்டதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நாடாளுமன்றத்தை அவர் சிறுமைப்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. தமது செயலுக்காக இந்த தேசத்திடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ராகுல் நேற்று பேசுகையில் வாய் தவறி துரதிருஷ்டவசமாக நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன் என்று பேசியிருந்தார். அதை சுட்டிக்காட்டி, உண்மையிலேயே அவர் துரதிருஷ்டமான எம்.பி.தான். ஏனெனில் தாம் அங்கம் வகிக்கும் நாடாளுமன்றத்தையே அவர் சிறுமைபடுத்தி பேசியுள்ளார். எனவே அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார் மத்திய அமைச்சர் அனுராக் தாகுர்.

நாடாளுமன்றத்துக்கு என்று சில விதிமுறைகளும், நடைமுறைகளும் உள்ளன. அவர் நாடாளுமன்றத்துக்கு தொடர்ந்து வந்திருந்தால் அவை விதிகள் பற்றி அவருக்கு தெரிந்திருக்கும். அவர் எதையும் படிப்பதில்லை. எப்போதாவதுதான் நாடாளுமன்றம் வருகிறார். தொடர்ந்து பொய் பேசுவதையே அவர் வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் தாகுர் குறிப்பிட்டார்.

ராகுல் காந்தியின் லண்டன் பேச்சுக்கு பல்வேறு பா.ஜ.க. தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தியாவுக்கு எதிரான தீய சக்திகள் பேசுவதைப் போலவே ராகுல் காந்தி

பேசுவதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண்ரிஜிஜு கூறியிருந்தார்.

தேசவிரோத சக்திகளின் கருவியாக ராகுல்காந்தி செயல்படுவதாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டியுள்ளார். பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே, ராகுலின் பேச்சுக்களை ஆய்வு செய்ய ஒரு குழு அமைத்து அவரது எம்.பி. பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com