கர்நாடகாவில் பா.ஜ.க. தோல்விக்கு பொம்மை சொல்லும் காரணங்கள்!

கர்நாடகாவில் பா.ஜ.க. தோல்விக்கு பொம்மை சொல்லும் காரணங்கள்!

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் போட்டியிட்டு 66 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. கிங் மேக்கர் என கருதப்பட்ட மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி 19 இடங்களை மட்டுமே வென்றுள்ளது.

இந்த தேர்தலில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரம் பதவி விலகும் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலாதன் நடைபெற்றது. காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தை முன்னதாகவே தொடங்கியதும், பா.ஜ.க. தேர்தல் பிரசாரம் மக்களை சரியாக சென்றடையாத்துமே தோல்விக்கு காரணம் என்கிறார் பொம்மை.

இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பசவராஜ் பொம்மை பா.ஜ.க.வின் படுதோல்விக்கு மூன்று காரணங்களை முக்கியமாகச் சொல்கிறார்.

முதல் காரணம் காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியில் அளித்த இலவசங்கள் மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

அடுத்த காரணம், தனிப்பட்ட முறையில் நான் கருதுவது என்னவென்றால், காங்கிரஸ் கட்சி திட்டமிட்டு, தேர்தலுக்கு முன்பிலிருந்தே தனது

பிரசாரத்தை தொடங்கியது. ஆளுங்கட்சியான பா.ஜ.க. இது விஷயத்தில் சற்று தாமதமாகவே தேர்தல் பிரசார களத்தில் இறங்கியது. மேலும் வேட்பாளர்கள் தேர்வு, தேர்தல் பிரசார உத்திகளை வகுப்பதிலும் பா.ஜ.க. தாமதமாகவே செயல்பட்டது.

இறுதியாக பா.ஜ.க. அரசு மாநிலத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய போதிலும் அந்த செய்திகள் மக்களை சரியாகச் சென்றடையவில்லை. முக்கியமான முடிவுகள் மக்களை சென்றடையவில்லை என்றார்.

மேலும் இந்த தேர்தலில் பா.ஜ.க. வாக்கு சதவீதம் குறையவில்லை. ஆனால், தென்கர்நாடகத்தில் வலுவாக உள்ள மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் வாக்குகள் பிரிந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டன. அதாவது மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் ஐந்து சதவீத வாக்குகள் காங்கிரஸ் பக்கம் சென்றுவிட்டது என்று பொம்மை சுட்டிக்காட்டினார்.

பா.ஜ.க.வின் வாக்குகள் கடந்த 2018 தேர்தலில் 36 சதவீதமாக இருந்த்து. இந்த தேர்தலிலும் அதே 36 சதவீத வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைத்துள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவீதம் 38.1 சதவீத்த்திலிருந்து 42.9 சதவீதமாக அதிகரித்துவிட்டது. மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் வாக்கு சதவீதம் 18.3 என்பதிலிருந்து 13.3 சதவீதமாக குறைந்துவிட்டது.

எனினும் தலைவர் என்ற முறையில் பா.ஜ.க.வின் தோல்விக்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். அப்போதுதான் நிலைமையில் முன்னேற்றம்

காணமுடியும். வரும் மக்களவைத் தேர்தலுக்கு நாங்கள் இப்போதிலிருந்தே தயாராகவேண்டும் என்பதுதான் இந்த தேர்தல் மூலம் நாங்கள் கற்றுக்கொண்ட பாடம். புதிய அளவில் சிந்திக்க வேண்டும், இளைஞர்களை கட்சியில் சேர்க்க வேண்டும், சோர்ந்துபோயுள்ள தொண்டர்களுக்கு புத்துணர்வு அளிக்க வேண்டும். இன்னும் மூன்று முதல் ஆறு மாத காலத்துக்குள் இவற்றை செய்தால் நிலைமையில் மாற்றம் ஏற்பட்டு வரும் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வெற்றிவாய்ப்பை பெற்றுத்தரும் என்றார் பொம்மை.

கர்நாடகத்திலிருந்து மக்களவைக்கு 28 எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எனவே போராட்டம் சற்று கடுமையாகத்தான் இருக்கும் என்றார் அவர்.

கர்நாடக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவராக மூத்த எம்,எல்.ஏ.வையே நியமிப்பார்கள். அந்த வாய்ப்பு உங்களுக்கு கிடைக்குமா? என்ற கேள்விக்கு பதிலளிப்பதை தவிர்த்த பொம்மை, கட்சியில் பதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் கட்சிக்காக உழைக்க எப்போதும் தயாராக இருக்கிறேன் என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com