கெஜ்ரிவால் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடியா? பா.ஜ.க. பேச்சால் சர்ச்சை!
தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள தனது அதிகாரபூர்வ இல்லத்தை ரூ.45 கோடி செலவில் அழகுபடுத்தியுள்ளதாக பா.ஜ.க. குற்றஞ்சாட்டியுள்ளது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
கெஜ்ரிவால் எளிமையை பற்றி அடிக்கடி பேசிவந்தாலும் அவரது செயல்பாடு அப்படியில்லை. வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவழிக்க வேண்டுமா? தார்மிக அடிப்படையில் அவர் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பா.ஜ.க. கோரியுள்ளது.
இது தொடர்பாக தில்லி அரசு தரப்பில் எந்த விளக்கமும் தரப்படாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
தில்லி முதல்வர் கெஜ்ரிவால் வசித்துவரும் அதிகாரபூர்வ இல்லம் 75-80 ஆண்டுகளுக்கு முன்னால் அதாவது 1942 இல் கட்டப்பட்டது. தில்லி அரசின் பொதுப்பணித்துறை இது தொடர்பாக ஆய்வு நடத்தி இல்லத்தை புதுப்பிக்க பரிந்துரைத்தது. அதன் பேரிலேயே வீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர், முதல்வர் கெஜ்ரிவாலின் வீடு புதுப்பிக்கப்படவில்லை. பழைய வீடு இருந்த இடத்தில் இப்போது புது வீடு கட்டப்பட்டுள்ளது. இதற்கான செலவுதான் ரூ.44 கோடி என தெரிவித்துள்ளார். சிவில் லைன்ஸ் பகுதியில் பிளாக்ஸ்டாப் சாலையில் உள்ள கெஜ்ரிவாலின் அரசு வீட்டை புதுப்பிக்க ரூ.43.70 கோடி அனுமதிக்கப்பட்டது. ஆனால், இதுவரை ரூ.44.78 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2020 செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை 6 முறை இதற்கான பணம் செலவிடப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
வீட்டின் உட்புற பகுதிகளை அலங்கரிக்க ரூ.11.30 கோடியும், தரைகளில் மார்பிள் சலவைக்கற்கள் பதிக்க ரூ.6.02 கோடியும், மின்சார கம்பிகள், குழாய்கள், கருவிகள் பொருத்த ரூ.2.58 கோடியும், தீயணைப்பு கருவிகள் பொருத்த ரூ.2.85 கோடியும், வார்ட்ரோப் அலமாரிகள் அமைக்க ரூ.1.41 கோடியும், சமையலறையை நவீன வசதிகளுடன் மாற்றியமைக்க (மாடுலர் கிச்சன்) ரூ.1.1 கோடியும் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் வீட்டிலேய அலுவலக முகாம் அமைக்க ரூ.8.11 கோடி செலவிடப்பட்டுள்ளது.
தில்லி மாநகரம் கோவிட் தொற்றை ஒழிப்பதற்கு போராடி வந்த நிலையில் முதல்வர் கெஜ்ரிவாலின் இல்லத்தை அழகுபடுத்த ரூ.45 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது தேவைதானா? எளிமையை பற்றி அடிக்கடி பேசும் கெஜ்ரிவால் ஆடம்பர செலவு செய்தது ஏன் என்று தில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவிட் தொற்று காலத்தில் தில்லி அரசின் வருவாய் பாதியாக குறைந்துவிட்டது. வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்பட்டன. அப்படியிருக்கையில் முதல்வர் வீட்டை புதுப்பிக்க ரூ.45 கோடி செலவிட்டது தேவைதானா? எனவும் அவர் கேட்டுள்ளார். வீண் செலவுகளுக்கு தார்மிக பொறுப்பேற்று முதல்வர் கெஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்றும் அவர் கோரினார்.
இதனிடையே ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான ராகவ் சதா. பா.ஜ.க.வுக்கு பதிலடி கொடுத்துள்ளார். முதல்வர் இல்லம் அவருக்கு சொந்தமானது அல்ல. அது அரசு கொடுத்துள்ள அதிகாரபூர்வ இல்லமாகும். பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசில் இடம்பெற்றுள்ள அமைச்சர்களின் வீடுகள் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டு புதுப்பிக்கப்படும்போது தில்லி முதல்வர் வீடு புதுப்பிக்கப்படுவது குறித்து மட்டும் கேள்வி எழுப்புவது ஏன் என்று அவர் கேட்டுள்ளார். பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களின் இல்லங்களுக்கு செலவிடப்பட்ட தொகையை வெளியிட பா.ஜ.க. தயாரா என்றும் ராகவ் சதா கேட்டுள்ளார்.