அரசியலமைப்புச் சட்டத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றுங்கள்: குடியரசுத் தலைவரிடம் மம்தா வலியுறுத்தல்!

அரசியலமைப்புச் சட்டத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றுங்கள்: குடியரசுத் தலைவரிடம் மம்தா வலியுறுத்தல்!

“அரசியலமைப்புச் சட்டத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றுங்கள், மக்களுக்கு உரிய சட்ட உரிமையை நிலைநாட்டுங்கள்” என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடம் மேற்கவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடியை தாக்கிப் பேசிவந்த அடுத்த சில நாட்களில் மம்தா இந்த கோரிக்கையை குடியரசுத் தலைவர் முர்முவிடம் வலியுறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

“மேடம், நீங்கள்தான் நாட்டின் சட்டப்பூர்வ தலைவர். நான் உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பேரழிவிலிருந்து காக்க வேண்டும். மேலும் மக்களுக்குரிய சட்ட உரிமைகளை நிலைநாட்ட வேண்டும்” என்று கொல்கத்தாவுக்கு திங்கள்கிழமை இரண்டு நாள் பயணமாக வந்துள்ள குடியரசுத் தலைவருக்கு நகரமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், நீங்கள் ஒரு தங்க மங்கை. ஆண்டாண்டு காலமாக இந்திய மக்கள் பல்வேறு சமூகம், வகுப்புகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருவது நாட்டிற்கு பெருமை அளிக்கிறது.

மேற்கு வங்க மாநிலமும் மிகப்பெரிய மரபு மற்றும் கலாசாரங்களைக் கொண்டது. பல்வேறு சீர்திருத்தங்களும் பெங்காலில் இருந்துதான் வந்தன. சுதந்திர போராட்ட இயக்கமும் இங்கிருந்து எழுச்சிபெற்று வந்ததுதான் என்றும் குறிப்பிட்டார்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு எம்.பி. பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அவரது பெயரை குறிப்பிடாவிட்டாலும், நாட்டில் ஜனநாயகம் தரம்தாழ்ந்து விட்டதாக மம்தா பானர்ஜி கூறியிருந்தார். மேலும் எதிர்க்கட்சிகள் குறிவைத்து ஆளுங்கட்சியினரால் தாக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடியின் புதிய இந்தியாவில், எதிர்க்கட்சித் தலைவர்கள் குறிவைக்கப்படுகிறார்கள். ஆனால், கிரிமினல் குற்றச்சாட்டுள்ள பா.ஜ.க.வினர் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுகிறார்கள். எதிர்க்கட்சியினரின் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்றும் டுவிட்டர் மூலம் கூறியிருந்தார்.

இதனிடையே தனக்கு அளிக்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேசுகையில், கல்வி, கலாசாரம், நாட்டுக்காக தியாகம் செய்தல் இவற்றுக்கு பெயர்போனது மேற்கு வங்கம். சுதந்திர போராட்ட தியாகிகளும், அறிவியல் அறிஞர்களும் உருவான இடம் மேற்கு வங்கம். அரசியல், நீதித்துறை, விளையாட்டு, ஆன்மீகம், சினிமா, நாடகம், கலை, இசை என பலதுறைகளில் முன்னிலை பெற்ற மாநிலம் மேற்கு வங்கம்.

சமூகநீதி, சமத்துவம் மற்றும் சுயமரியாதை உள்ளிட்ட கொள்கைகளுக்கு முக்கியத்தும் கொடுத்து இங்குள்ள மக்கள் செயல்பட்டு வருகின்றனர் என்று புகழாரம் சூட்டினார்.

இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு தாம் அழைக்கப்படவில்லை என்று பா.ஜ.க.வின் சுவேந்து அதிகாரி குற்றஞ்சாட்டினார். ஆனால், அதை திரிணமூல் காங்கிரஸ் மறுத்துள்ளது. அவரது குற்றச்சாட்டில் அடிப்படை இல்லை. அவர் அழைக்கப்பட்டும் நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டார் என்று கூறியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com