கேரள ஸ்டோரிக்கு தடைகோரி களத்தில் இறங்கும் சீமான்; குழப்பத்தில் தி.மு.க கூட்டணிக்கட்சிகள்!
தேசிய அளவில் சர்ச்சைக்குரிய படமாக உருவாகியுள்ள கேரளா ஸ்டோரிக்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுக்கிறது. திரைப்படத்தை தடை செய்யக்கோரி தி.மு.கவின் கூட்டணியில் உள்ள சில கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் மௌனம் சாதிக்ககின்றன. படத்திற்கு தடை விதிக்குமாறு காங்கிரஸ் கட்சி பேசியதை பிரதமர் மோடி தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் விமர்சித்திருக்கிறார்.
சென்னையில் அண்ணாநகர், அமைந்தகரை, ராயப்பேட்டை, வேளச்சேரி, வடபழனி ஆகிய இடங்களில் உள்ள வணிக வளாகங்களில் கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகியுள்ள திரையரங்குகளில் முற்றுகைப் போராட்டம் நடத்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி முடிவு செய்திருக்கிறது. திரைப்படம் குறித்து பாராட்டியும், விமர்சித்தும் ஏராளமான விமர்சனங்கள் வந்திருக்கும் நிலையில் திரைப்படத்தை குறிப்பிட்டு நேற்று பிரதமர் மோடி பேசியதன் காரணமாக கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.
கேரளா ஸ்டோரி திரைப்படம் சென்னை உள்ளிட்ட வட தமிழ்நாட்டின் சில நகரங்களில் மட்டுமே வெளியாகியிருப்பதாக தெரிகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக தென் தமிழ்நாட்டில் திரைக்கு வரவில்லை. திரைப்பட வெளியீடு தொடர்பாக எந்தவொரு சட்டம் ஒழுங்கு சீர்கேடும் எழுந்துவிடக்கூடாது என்பதற்காக தமிழக காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை அமைந்தகரையில் நடைபெறும் முற்றுகைப் போராட்டத்தில் சீமான் கலந்து கொள்கிறார். சென்ற மாதம் வெளியான புர்கா திரைப்படத்தையும் தடை செய்யும்படி நாம் தமிழர் இயக்கம் போராட்டத்தில் இறங்கியிருந்தது. இஸ்லாமிய பெண்கள் அணியும் புர்காவின் பின்னணியில் உருவான படம், சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றது. சென்ற மாதம் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியானதன் காரணமாக நாம் தமிழர் இயக்கத்தினரால் முற்றுகை போராட்டத்தில் இறங்க முடியவில்லை.
தற்போது கேரளா ஸ்டோரி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகியிருப்பதால் நாம் தமிழர் கட்சி களம் காண்கிறது. இந்திய பெருநாட்டில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு மதவாத சக்திகளின் ஆதிக்கம் அதிகரித்து, அவர்களின் கொடுங்கரங்களில் அதிகாரம் சிக்கியுள்ள நிலையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை தவறாக சித்தரிப்பது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் மக்களின் நம்பிக்கைகளை இழிவுப்படுத்தி, அவர்களின் உணர்வுகளைச் சீண்டி, பதற்றமான சூழலை உருவாக்கும் படைப்புகளைப் புறக்கணிக்க வேண்டுமென திரைப்பட ரசிகர்களையும் ஏற்கனவே அறிக்கை மூலமாக சீமான் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கேரளா ஸ்டோரி தொடர்பாக பா.ஜ.கவை கண்டித்து அறிக்கை விடுத்தோடு நிறுத்திக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திரைப்படத்தை நாடு முழுவதும தடை செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.
நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் இஸ்லாமிய அமைப்புகளோடு இணைந்து போராட்டக்களத்தில் இறங்கியிருப்பது தி.மு.க கூட்டணிக்கட்சிகளை குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தமிழ்நாடு, கேரளாவில் ஆட்சிப்பொறுப்பில் உள்ள சக கூட்டணிக்கட்சிகளை காயப்படுத்தாமல் பா.ஜ.கவுக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கான ஆலோசனைகளில் இறங்கியிருப்பதாக பத்திரிக்கையாளர் வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.