சொத்துக்குவிப்பு அல்ல, வாட்ச் வாங்கிய விவகாரம் - இதுவும் டைம் வேஸ்ட்தான், செந்தில் பாலாஜி கமெண்ட்!

சொத்துக்குவிப்பு அல்ல, வாட்ச் வாங்கிய விவகாரம் - இதுவும் டைம் வேஸ்ட்தான், செந்தில் பாலாஜி கமெண்ட்!

தி.மு.க நிர்வாகிகளில் சொத்துப் பட்டியலை வெளியிட்டு அதிர்வுகளை ஏற்படுத்திய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முன்னதாக ரபேல் வாட்ச் பற்றி பேசியிருந்தார். ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி டைம் வேஸ்ட் செய்துவிட்டதாக தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி தெரிவித்ததைத் தொடர்ந்து அதேபோல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும் தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை பேச்சைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை வெளியிட்ட வாட்ச் சீரியல் எண் மாறியுள்ளது. மனசாட்சி உள்ள யாரும் அண்ணாமலை வெளியிட்டதை பில் என்று எடுத்துக்கொள்ளமாட்டார்கள். வாட்ச் வாங்கியவர் ரூ.4 லட்சத்திற்கு வாங்கி ரூ.3 லட்சத்திற்கு விற்றார் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? என்னிடம் வாட்ச் இல்லை, பரிசாக வாங்கினேன் என்று ஒப்புக்கொள்ள வேண்டியது தானே? ஆகவே, ரபேல் கடிகார பில் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லையென்று தெரிவித்திருக்கிறார்.

சென்ற ஆண்டு ரபேல் வாட்ச் சர்ச்சையானது. அதை ஆரம்பித்து வைத்தவர், செந்தில் பாலாஜிதான். அப்போது தி.மு.க - பா.ஜ.க இரு தரப்பினரும் ஒருவரையொருவர் விமர்சித்துக்கொண்டதால் பெரும் விவாதமாக இருந்து வந்தது. தான் கட்டியிருக்கும் வாட்ச், பேசுபொருளானது குறித்து பேசியிருந்த அண்ணாமலை, தன்னுடைய வாட்ச், சட்டை, வேஷ்டி கார் அனைத்தையும் ஆளுங்கட்சியினர் ஆய்வு செய்து கொண்டிருப்பதாக பேசியிருந்தார்.

பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள வாட்சை, வெறும் 4 ஆட்டுக்குட்டிகளை மட்டும் சொத்தாக வைத்திருப்பவர் சொல்கிறார். இதை எப்படி ஏற்றுக்கொள்வது? அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் மகிழலாம். ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? என்றெல்லாம் கேள்வி கேட்டிருந்தார்.

செந்தில் பாலாஜிக்கு ஆறு மாதம் கழித்து அண்ணாமலை பதிலளித்திருக்கிறார். தான் எம்.பி.ஏ படித்தபோது வாங்கிய 11 லட்ச ரூபாய் கடனை 7 ஆண்டுகள் கஷ்டப்பட்டு கட்டினேன். இந்தியாவில் 2 ரபேல் வாட்ச் மட்டுமே விற்றுள்ளது; அதில் ஒரு வாட்ச்-ஐ நான் வைத்திருக்கிறேன். இந்தியாவில் இதுவரை 2 ரபேல் வாட்ச் விற்கப்பட்டுள்ளன. ஒன்றை கோவையைச் சேர்ந்தவரும், இன்னொன்றை மும்பையைச் சேர்ந்தவரும் வாங்கியிருந்தார்கள்.

கோவை ஜிம்சன் எனும் நிறுவனத்தில் ரபேலின் 2ஆவது வாட்ச் விற்பனை செய்யப்பட்டிருந்தது. 2021 மார்ச் மாதத்தில் சேரலாதன் எனும் கேரளாவை சேர்ந்த நபருடைய வாட்ச் இது; அவரிடமிருந்து இந்த வாட்சை வாங்கியிருக்கிறேன் என்று விளக்கம் தந்திருக்கிறார். இந்த விளக்கத்தை கேட்டபின்னர்தான் செந்தில் பாலாஜி, பத்திரிக்கையாளர்களை சந்தித்து, டைம் வேஸ்ட் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் எத்தனையோ மக்கள் பிரச்னை இருக்கின்றன. அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாத தமிழக பா.ஜ.க தலைவரும், மின்சாரத்துறை அமைச்சரும் ஒரு வாட்ச் பற்றி மாதக்கணக்கில் பேசுவது வேடிக்கைதான் என்கிறார்கள். வெயிட் பண்ணுங்கய்யா... அடுத்து வேஷ்டி பத்தியும் பேசுவாங்க!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com