சரத் பவாருக்கு மேலும் ஒரு பின்னடைவு: அதிகரிக்கும் அஜித்பவாருக்கான ஆதரவு!

சரத் பவார்- அஜித் பவார்
சரத் பவார்- அஜித் பவார்

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்குள் (என்.சி.பி.) அதிகார மோதல் நடந்து வரும் நிலையில்  நாகாலாந்து மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 7 எம்.எல்.ஏ.க்களும் அஜித் பவார் தலைமையிலான தேசிவாத காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

நாகாலாந்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நீண்ட விவாதத்துக்குப்பின் அஜித்பவார் மற்றும் பிரபுல் படேல் தலைமையிலான அணிக்கு ஆதரவு அளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டதும். இது தொடர்பாக அஜித்பவாருக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளதாகவும்  எம்.எல்.ஏ.க்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் திடீரென பிளவு ஏற்பட்டது. அஜித்பாவர் மற்றும் 8 தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அதிரடியாக ஆளும் சிவசேனை-பா.ஜ.க. கூட்டணி அரசில் சேர்ந்தனர். அஜித் பவார் துணை முதல்வராகவும் மற்றவர்கள் அமைச்சர்களாகவும் பதவியேற்றனர். இந்த நடவடிக்கை தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவாருக்கு அதிர்ச்சி அளித்தது.

கட்சியிலிருந்து பிரபுல் படேல் மற்றும் சிலர் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை கோரி மனு கொடுத்துள்ளதாகவும் சரத்பவார் தெரிவித்தார். மேலும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக தாம் நீடிப்பதாகவும் தெரிவித்திருந்தார்.இதற்கு பதிலடியாக அஜித் பவார் கோஷ்டியினர் தாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்று கோரி ஜெயந்த் படேலை தலைவர் பதவியிலிருந்து நீக்கி, அதற்கு பதிலாக பிரபுல் படேலை தலைவராக நியமித்தனர்.

இதனிடையே மகாராஷ்டிரத்தில் முதல்வர் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டு முக்கிய துறையான நிதித்துறை அஜித்பவாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு, எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகவும் தாம் கட்சியின் தலைவராக கடந்த ஜூன் 30 ஆம் தேதி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அஜித் பவார் தேர்தல் ஆணையத்திடம் கூறிய நிலையில் சரத் பவார், தாம் கட்சித் தலைவராக தொடர்ந்து நீடிப்பதாக கூறினார்.

 இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அஜித்பவார், பிரபுல் படேல், சக்கன் புஜ்பல் மற்றும் முக்கிய தலைவர்கள் சரத்பவாரை மும்பையில் நேரில் சந்தித்து ஆசிபெற்றனர். கட்சியில் பிளவு வேண்டாம் ஒற்றுமையுடன் இருப்போம்  என்று கூறினார்.

ஒருவேளை மனம் மாறி சரத் பவார் சமாதானமாகப் போகலாம் என்று எதிர்ப்பார்த்த நிலையில் அஜித்பவார் கோஷ்டியினரை சரத் பவார் பொருட்படுத்தாமல் பெங்களூருவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றார்.ஆனாலும், இப்போது நாகாலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றி அஜித்பவாரை ஆதரிப்பதாக தெரிவித்துள்ளது சரத்பவாருக்கு மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com