தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விலகினார் சரத் பவார்! அடுத்த தலைவர் யார்?
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக மூத்த அரசியல் தலைவரான சரத் பவார் அறிவித்துள்ளார். எனினும் தீவிர அரசியலில் ஈடுபடுவது தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தான் எழுதிய 'லோக் மாஜே சங்கதி' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் சரத் பவார் இதனை அறிவித்தார். அடுத்த ஆண்டு மராட்டிய மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சரத்பவாரின் இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சரத் பவார், கடந்த 1960 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி பொது வாழ்க்கையில் நுழைந்தேன். 2023 மே 1 ஆம் தேதியுடன் நான் பொது வாழ்க்கையில் நுழைந்து 63 வருடங்கள் கடந்துவிட்டது. இப்போது நான் தலைமைப் பதவியிலிருந்து விலகும் நேரம் வந்துவிட்டது என்று 82 வயதான சரத் பவார், மும்பையில் தனது சுயசரிதை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் புதிய தலைமுறையினர் கட்சியை வழிநடத்திச் செல்லும் நேரம் வந்துவிட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் புதிய தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று பவார் தெரிவித்தார்.
நான்குமுறை மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் பதவியை வகித்த சரத் பவார், இந்த அதிர்ச்சி தரும் செய்தியை அறிவித்தபோது அவருடய உறவினர் அஜித் பவாரும் உடன் இருந்தார்.
1999 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாக அக்கட்சியின் தலைவராக சரத் பவார் இருந்து வந்தார். இந்த நிலையில் அவர், கட்சித் தலைமைப் பதவியிலிருந்து விலகி உள்ளார்.
இது குறித்து தொண்டர்களிடம் பேசுகையில் பவார் கூறியதாவது: நீண்டகாலம் தலைமைப் பதவியில் இருந்த நான், இப்போது விலகி இருப்பது அவசியமாகிறது. அதனால் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன். தலைவர் பதவியிலிருந்து விலகினாலும் பொது வாழ்க்கையிலிருந்து நான் விலகவில்லை. எனது அரசியல் பயணம் தொடரும். நான் தொடர்ந்து பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பேன்.
நான் அரசியலிலிருந்து முழு ஓய்வுபெறவில்லை. பொது வாழ்விலிருந்து என்னை யாரும் பிரிக்க முடியாது. நான் கடைசி மூச்சு இருக்கும் வரை உங்களுடன் இருப்பேன் என்று தொண்டர்களிடம் பேசிய பவார் கூறினார்.
இதனிடையே அடுத்த தலைவர் யார் என்பது குறித்து ஆலோசிக்கு முடிவு எடுக்க கட்சியின் மூத்த உறுப்பினர்களான பிரஃபுல் படேல், ஜெயந்த் படேல், சுப்ரியா சுலே, அஜித் பவார், அனில் தேஷ்முக், சஜ்ஜன் புஜ்பால் உள்ளிட்டோர் அடங்கிய குழு அமைக்கப்படும் என்று தெரிகிறது.
இந்நிலையில் கட்சியின் புதிய தலைவராக அஜித் பவார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை பா.ஜ.க.வை நோக்கி நகர்த்திச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக வதந்திகள் உலா வருவது குறிப்பிடத்தக்கது.
எல்லோரும் ஏதாவது ஒரு நேரத்தில் ஒரு முடிவை எடுக்க வேண்டியிருக்கும். சரத் பவார் இப்போது ஒரு முடிவை எடுத்து அறிவித்துள்ளார். அவர் இதிலிருந்து பின்வாங்க மாட்டார். எனினும் அடுத்த தலைவர் அவரது வழிகாட்டுதல் பேரிலேயே செயல்படுவார் என்று அஜித் பவார் கூறியுள்ளார்.