உத்தவ் தாக்கரேவை சீண்டிய சரத்பவார்...
சிவசேனை கட்சிக்குள் அதிருப்தி கோஷ்டி உருவாவதை சரியான நேரத்தில் கண்டுபிடித்து தடுக்க உத்தவ் தாக்கரே தவறிவிட்டதாகவும், எந்த எதிர்ப்பும் காட்டாமல் மகாராஷ்டிர முதல்வர் பதவிலியிருந்து விலகி விட்டதாகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு முதல்வர் என்றால், தனக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஆனால், அவ்வாறு செயல்பட உத்தவ் தவறிவிட்டதாகவும், செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தமது திருத்தப்பட்ட “மக்களுடன் நான்” சுயசரிதை புத்தகத்தில் பவார் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனை கட்சிகளின் கூட்டணியான மகா விகாஸ் அகாதி, அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் உருவானதல்ல. பா.ஜ.க.வுக்கு எதிரான வலுவான கூட்டணியாக செயல்படும் நோக்கத்திலேயே அமைக்கப்பட்டது.
மகா விகாஸ் அகாதி கூட்டணியை உடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், சிவசேனை கட்சிக்குள்ளேயே அதிருப்தி கோஷ்டி உருவாகும் என எதிர்பார்க்கவில்லை. உத்தவ் தாக்கரே முதல்வரானது கட்சிக்குள் சிலருக்கு பிடிக்கவில்லை. அதிருப்தி கோஷ்டியை அடக்குவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமலேயே, உத்தவ் தாக்கரே மெளனமாக இருந்து பதவியை ராஜிநாமாச் செய்துவிட்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஷிண்டே தலைமையிலான கோஷ்டியினர், உத்தவ் தலைமைக்கு எதிராக போர்க்கொடி எழுப்பினார். உத்தவ் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ராஜிநாமாச் செய்ததால் ஆட்சி முடிவுக்கு வந்த்து என தனது புத்தகத்தில் விமர்சனம் செய்துள்ளார் சரத் பவார்.
மேலும், ஒரு முதல்வர் அரசியலில் புத்திசாதுரியாமாகச் செயல்பட வேண்டும். தனக்குப் பின்னால் என்ன நடக்கிறது என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். கட்சியின் அடுத்த நிலை தலைவர்களை கட்டுக்குள் வைத்திருக்கவும் தெரியவேண்டும். ஆனால், உத்தவ் தாக்கரேவிடம் அத்தகைய திறமைகள் இல்லை.
நடுத்தர மக்கள் தாக்கரேவை விரும்பினார்கள். அவருடன் கோவிட் தொற்றுக் காலத்தில் முகநூலில் உரையாடினார்கள். ஆனாலும் அந்த நேரத்தில் அவர் இரண்டு முறை மட்டுமே தலைமைச் செயலகத்துக்கு வந்து சென்றார். அது ஏன் என்று தெரியவில்லை என்று பவார் என குறிப்பிட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, 2019ல் அஜித் பவார் பா.ஜ.க.வுடன் கைகோர்த்தார். ஆனால், அவரது செயல் சிறிது காலம் மட்டுமே நீடித்தது. அஜீத் பவார் மீண்டும் தேசியவாத காங்கிரஸுக்கு திரும்ப எனது மனைவி பிரதீபா முக்கிய பங்காற்றினார் என பவார், திருத்தப்பட்ட சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு சரத்பாவர், சிவசேனை மற்றும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணிக்கு முயன்ற சமயத்தில் அஜித் பவார், பா.ஜ.க. தலைவர் தேவேந்திர பட்னவிஸுடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். ஆனால், அந்த அரசு வெகுநாள் நீடிக்கவில்லை. அஜித்தின் சகோதரர் ஸ்ரீனிவாஸ் தொடர்ந்து அவருடன் பேச்சு நடத்தி வந்தார். எனது மனைவி பிரதீபாவும் அஜித்துடன் தொடர்ந்து பேசி வந்தார். அவருக்கு அரசியல் ஈடுபாடு எல்லாம் கிடையாது. இது குடும்ப்ப் பிரச்னை தொடர்புடையது என்பதால் அவர் தலையிட்டார் என்று சரத் பவார் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். அஜித் பவார் சரத் பவாரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதீபாவுடன் நடந்த சந்திப்புக்கு பிறகு அஜித் நடந்தவற்றுக்கு வருத்தம் தெரிவித்து, தவறை உணர்ந்து பின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு திரும்பினார். இதுதான் நடந்த்து என்றார் சரத் பவார். பின்னர் உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி அமைந்தபோது அஜித் துணை முதல்வரானார். இப்போது மராஷ்டிர அரசில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.
கரோனா காலத்தில அவர் செய்த பணிகள்தான் அஜித்தை துணை முதல்வராக்கியது. இது தொடர்பாக நான் எடுத்த முடிவு சரியானது என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது என்று பவார் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.