பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணி கட்சிகளை வலுப்படுத்தும் சரத் பவார்!

பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணி கட்சிகளை வலுப்படுத்தும் சரத் பவார்!

தேசியவாத கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, பின்னர் தொண்டர்களின் வற்புறுத்தல் காரணமாக முடிவை திரும்பப் பெற்றுக்கொண்டிருப்பதாக அறிவித்த சரத் பவார், மீண்டும் அரசியல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியிருக்கிறார். இம்முறை பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியில் சேருவதற்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.

82 வயதாகும் சரத் பவார், மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வர். மத்திய அரசில் பல்வேறு அமைச்சகங்களில் பணிபுரிந்திருக்கிறார். கிங் மேக்கராக இருந்து மகராஷ்டிரா அரசியலில் பல தலைவர்களை ஆட்சியில் அமரவைத்திருக்கிறார். பலரை வீட்டிற்கும் அனுப்பி வைத்திருக்கிறார்.

இந்நிலையில் அவரது மருமகனும் மகராஷ்டிரா எதிர்க்கட்சித் தலைவருமான அஜித் பவார், பா.ஜ.கவுடன் கூட்டணி சேர தயராகிவருவதாக செய்திகள் வந்த நேரத்தில்தான் கட்சித் தலைவர் பதவியிலிருந்து தான் விலகிவிடப்போவதாக சரத் பவார் அறிவித்திருந்தார். பின்னர் அறிவிப்பை திரும்பப் பெற்றுக் கொண்டார்.

pதற்போது தேசிய அரசியல் பற்றி பேசி வரும் சரத் பவார், கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரமும் செய்திருக்கிறார். மத்தியில் ஆட்சியில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக ஒரு மாபெரும் கூட்டணியை கட்டமைக்க வேண்டியிருப்பதாகவும், இதை செய்து முடிக்க யாரெல்லாம் முன்வருகிறார்களோ அவர்களிடம் தான் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

மாநிலக்கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடினால், பா.ஜ.கவுக்கு எதிராக தேசிய அளவில் ஓரணி அமைப்பதற்கான சாத்தியங்கள் பற்றி பேசப்பட்டு வருகிறது. அதற்கேற்ப கடந்த சில மாதங்களில் நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, சந்திரசேகர் ராவ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டவர்கள் பிற மாநிலக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் முதல் முறையாக சரத் பவாரும் கூட்டணி குறித்து பேச ஆரம்பித்திருக்கிறார். இந்தியாவை பா.ஜ.கவிடமிருந்து காப்பாற்ற ஒரு மாற்றுச் சக்தி வந்தாகவேண்டும் என்றும் இது தொடர்பாக நிதிஷ் குமாரோ, மம்தா பானர்ஜியோ யார் முன்வந்தாலும் ஆதரிக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இது பற்றி நாளை மும்பைக்கு வரும் நிதிஷ் குமாரை சந்தித்து பேசவிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் மகராஷ்டிரா அளவில் ஒரு கூட்டணியை அமைக்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க வலுவாக இருந்தாலும் ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலையில்தான் இருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியாக தேசிய வாத காங்கிரஸ் கட்சி இருக்கிறது. சிவசேனாவோ ஆட்சிக்கு வந்த பின்னர் இரண்டாக பிளவுபட்டுவிட்டது.

இந்நிலையில் சரத்பவார் முதலில் மகராஷ்டிராவிலிருந்துதான் தன்னுடைய பணிகளை ஆரம்பித்தாக வேண்டும். இல்லாவிட்டால் அஜித்பவார் கட்சியை உடைத்து, பா.ஜ.கவுடன் கூட்டணி சேருவார் என்கிறார்கள், அரசியல் விமர்சகர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com