சரத்பவார் ராஜினாமா வாபஸ் - நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா!

சரத்பவார் ராஜினாமா வாபஸ் - நாடகம் விடும் நேரம்தான் உச்சக்காட்சி நடக்குதம்மா!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மகாராஷ்டிராவின் கிங் மேக்கருமான சரத் பவார், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே இது போல் பலமுறை அறிவித்து பின்னர் பின்வாங்கியிருக்கிறார் என்பதால் மறுபரீசிலனை செய்வதற்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள், அவரது ஆதரவாளர்கள்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக சரத் பவார் திடீரென்று அறிவித்திருக்கிறார். 83 வயதை எட்டும் சரத் குமார், வயது முதிர்வை காரணம் காட்டி பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதன் பின்னணியில் ஆட்சி மாற்றம் இருப்பதாகவும், ஷிண்டேவுக்கு எதிராக பா.ஜ.க அடுத்த ஆட்டத்தை ஆரம்பிக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் இருந்து வருகின்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவரும் சரத் பவாரின் மருமகனுமான அஜித் பவார், கடந்த சில வாரங்களாக அடுத்த அரசியல் நகர்வுகளுக்கு தயாராகிவிட்டார். பா.ஜ.கவைச் சேர்ந்த முக்கிய தலைவர்களை அஜித் பவார் சந்தித்து வருவதாக மும்பை வட்டாரத்தில் செய்திகள் அடிபடுகின்றன.

தேசியவாத காங்கிரஸ் கட்சி, மகாராஷ்டிராவின் முக்கியமான எதிர்க்கட்சியாக இருந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியை விட வலுவாக உள்ள தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சார்பில்தான் அஜித் பவார், எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். அஜித் பவாரின் அரசியல் நடவடிக்கைகள் ஷிண்டே தலைமையிலான அரசுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பதாக பேசப்படுகிறது.

தேசியவாத காங்கிரஸ் கட்சி மறுபடியும் பா.ஜ.கவுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி அமைக்கும் நேரம் நெருங்கி வருவதாக மும்பை அரசியல் பார்வையாளர்கள் பேசிக்கொண்டிருந்த நேரத்தில்தான் சரத் பவாரின் ராஜினாமா அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. புதிய தலைமுறையினர் கட்சியையும், கட்சி செல்ல நினைக்கும் பாதையையும் வழிநடத்த வேண்டிய நேரம் இது என்றெல்லாம் சரத் பவார் விளக்கம் தந்தாலும் அஜித் பவாரின் நடவடிக்கைகள் மீது அதிருப்தி கொண்டிருப்பதாகவும் தெரிகிறது.

சரத் பவார் விலகுவதால் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்து முடிவு செய்வதற்காக கட்சி உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும் என்பது சரத் பவாரின் விருப்பம். ஆனால், அஜித் பவாரோ வேறு விதமாக நினைக்கிறார். சரத் பவார் தன்னுடைய நம்பிக்கைக்குரிய ஒருவரை தேர்ந்தெடுத்து செயல் தலைவராக நியமிக்கவேண்டும் என்பது அவரது கருத்து.

எதிர்பார்த்தது போல் சரத் பவாரின் அறிவிப்பு, கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்து, முடிவை பரிசீலனை செய்யுமாறு கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். சரத் பவார் தலைவராக தொடரவேண்டும் என்பது அவர்களது விருப்பம்.

தொண்டர்களின் பாசப்போராட்டத்தால் சரத் பவாரும் இறங்கி வந்திருக்கிறார். இது பற்றி இறுதி முடிவெடுக்க சில நாட்கள் அவகாசம் வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறார். உங்களுடைய வேண்டுகோளின் காரணமாக முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு தயாராக இருக்கிறேன். இரண்டு நாட்கள் தேவை. கட்சித் தொண்டர்கள் அமைதியாக இருக்கவேண்டும் என்று தெரிவித்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எது எப்படியோ, அஜித் பவாரை செயல் தலைவராக்கிவிட்டு, வெறும் தலைவராக சரத் பவார் தொடருவார் என்று கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. முன்னர் அஜித் பவார் அவசரப்பட்டு பா.ஜ.கவோடு கூட்டணி சேர்ந்து அதிகாலையில் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டதைப் போல் இன்னொரு நிகழ்வு நடந்தால் ஆச்சர்யப்படவேண்டியதில்லை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com