சிவசேனை - பா.ஜ.க. கூட்டணி தொடரும்: ஏக்நாத் ஷிண்டே அறிவிப்பு!
பா.ஜ.க. - சிவசேனை கூட்டணி தொடரும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தவ் தாக்கரே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வரானார். ஆனால், சிவசேனை கட்சியைச் சேர்ந்த 39 எம்.எல்.ஏ.க்கள் ஷிண்டே தலைமையில் போர்க்கொடி உயர்த்தியதை அடுத்து உத்தவ் தலைமையிலான கூட்டணி அரசு, 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கவிழ்ந்தது. பின்னர் பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்றார்.
இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணையம் ஷிண்டே அணியினர்தான் உண்மையான சிவசேனை என்று கூறி அக்கட்சிக்கு வில் அம்பு சின்னத்தை ஒதுக்கியது. உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனைக்கு தீப்பந்தம் சின்னம் ஒதுக்கப்பட்டது.
இதற்கிடையே மகாராஷ்டிர அரசியல் நெருக்கடி தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், உத்தவ் தாக்கரே நம்பிக்கையில்லா தீர்மானத்தை சந்திக்காமலே அதற்கு முன்னதாகவே பதவியை ராஜிநாமா செய்துவிட்டதால் அவர் மீண்டும் முதல்வராக முடியாது என தெரிவித்தது.
எனினும் ஷிண்டே பிரிவுக்கு ஆதரவாக அப்போது பதவியில் இருந்த மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷியாரின் செயல் கண்டிக்கத்தக்கது. தாக்கரே பெரும்பான்மையை இழந்துவிட்டார் என்ற தவறானை முடிவை ஆளுநர் எடுத்துவிட்டார் என்றும் கூறிய நீதிமன்றம், முதல்வராக ஷிண்டேவும், அவரது அமைச்சரவையும் பதவியில் தொடரலாம் என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் பா.ஜ.க.-சிவசேனை கூட்டணி தொடரும் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திங்கள்கிழமை அறிவித்துள்ளார். இனி வரும் தேர்தல்களில் அது உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் சரி சிவசோனை- பாஜக. கூட்டணி தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே திங்கள்கிழமை கூறியதாவது: நானும் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் இருவரும் தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினோம்.
இந்த சந்திப்பின்போது இனி எதிர்காலத்தில் நடைபெறும் மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.வும் சிவசேனையும் இணைந்தே போட்டியிடுவது என தீர்மானிக்கப்பட்டது. வரும் தேர்தல்களில் பா.ஜ.க.-சிவசேனை கூட்டணி போட்டியிட்டு வெற்றிபெறுவது உறுதி என்றும் அவர் கூறினார். அமித்ஷாவுடனான சந்திப்பு தொடர்பான புகைப்படத்தையும் ஷிண்டே வெளியிட்டுள்ளார்.
தில்லியில் அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பின் போது வேளாண்ம, கூட்டுறவு உள்ளிட்ட விஷயங்களும் விவாதிக்கப்பட்டன. மாநிலத்தில் நிலுவையில் உள்ள திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. விரைவில் அவற்றை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷிண்டே தெரிவித்தார்.
பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துவது குறித்து பிரதமர் மோடியிடம் வழிகாட்டுதல் பெற்றுள்ளோம். கூட்டுறவுத்துறை திட்டங்களை செயல்படுத்துவது குறித்து அமித்ஷாவிடம் பேச்சு நடத்தினோம் என்றும் ஷிண்டே கூறினார்.