கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா!

கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா!
Published on

கர்நாடக முதல்வராகிறார் சித்தராமையா. கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் அமோக வெற்றிபெற்றதை அடுத்து முதல்வர் யார் என்ற பரபரப்பு எழுந்தது.முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவும், கட்சியின் மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் போட்டா போட்டியில் ஈடுபட்டனர்.

கர்நாடகத்தில் நான் பங்கேற்ற கடைசி தேர்தல் இதுதான். மேலும் கடந்த முறை எனது தலைமையில் காங்கிரஸ் ஐந்து ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது. எனவே என்னைத்தான் முதல்வராக நியமிக்க வேண்டும் என்று சித்தராமையா பிடிவாதமாக கூறிவருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக சரியான தூக்கம், உணவு இல்லாமல் கட்சிக்காக உழைத்து இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்துள்ளேன். கட்சி மீதான எனது விசுவாசத்துக்கும், நான் உழைத்த உழைப்புக்கும் பரிசாக முதல்வர் பதவியை எனக்குத்தான் தர வேண்டும் என்று டி.கே.சிவக்குமாரும் கூறிவருகிறார்.

இந்த இழுபறியான நிலையில் இரண்டு தலைவர்களையும் தில்லிக்கு அழைத்து பேசிய காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவையே கர்நாடக முதல்வராக நியமிக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

சித்தராமையாவுக்கு இருக்கும் அரசியல் அனுபவம் மற்றும் எம்.எல்.ஏ.க்களிடையே இருக்கும் செல்வாக்கு இவற்றை கருத்தில்கொண்டு அவரையே முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் மேலிடம் தேர்வு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எனினும் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரையும் கட்சி மேலிடம் குறைத்து மதிப்பிடவில்லை. மாநிலத்தில் அவரது செல்வாக்கு தொடரவேண்டும். கட்சி மேலும் பலப்படுத்தப்படுத்த வேண்டும். வரும் மக்களவைத் தேர்தல்வரை அவரது உழைப்பு தேவை என்று கருதுகிறது.

எனினும் கட்சிக்குள் கோஷ்டி மோதல மேலும் பூதாகரமாக வெடித்துவிடாமல் தடுக்கும் நோக்கில் சித்தராமையாவை முதல் இரண்டரை ஆண்டு காலம் முதல்வர் பதவியில் இருக்கலாம். மீதமுள்ள இரண்டரை ஆண்டில் டி.கே.சிவக்குமார் முதல்வராக தொடரட்டும் என்று கட்சி மேலிடம் விரும்புவதாகத் தெரிகிறது.

இந்த சமாதான முயற்சி ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டதுதான் என்றாலும் முதலில் டி.கே.சிவக்குமார் இந்த திட்டத்தை ஒப்புக் கொள்ளவில்லை. இப்போது மீண்டும் அத்திட்டத்தை மேலிடம் வலியுறுத்தவே அதை அவர் ஏற்றுக்கொண்டு சித்தராமையா முதல்வராக வழிவிடுவார் என்று கருதப்படுகிறது.

சித்தராமையா முதல்வராகும் நிலையில், சிவக்குமாரை துணை முதல்வராக்கவும் மேலிடம் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. மேலிடம் எந்த முடிவு எடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள சிவக்குமார் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. துணை முதல்வர் பதவி கொடுத்தால் தமக்கு முக்கியமான துறைகள் கொடுக்க வேண்டும் என்று சிவக்குமார் கோரியுள்ளதாகத் தெரிகிறது.

ஹிமாச்சல் மாநிலம் சென்றுள்ள சோனியாகாந்தி, தில்லி திரும்பியவுடன் இந்திய புதிய உடன்பாடு இறுதிசெய்யப்பட்டு அறிவிப்பாக வெளியிடப்படும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக முதல்வர் பதவிக்கு சித்தராமையாவும் சிவக்குமாரும் போட்டி போட்ட நிலையில் முன்னாள் துணை முதல்வரான டாக்டர் ஜி.பரமேஸ்வரன், முதல்வர் பதவி தனக்கு அளிக்கப்பட்டால் அந்த பொறுப்பை ஏற்கத் தயார் என்று தெரிவித்து புதிய சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக முதல்வர் பதவி யாருக்கு என்பது தொடர்பாக இழபறி நிலை நீடித்து வரும் நிலையில் விரைவில் நல்ல முடிவு வரும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

ஆட்சியமைக்க எந்த சிக்கலும் இல்லாத நிலையில் முதல்வப் பிரச்னைக்கு விரைவில் தீர்வுகாண வேண்டும் என்பதில் காங்கிரஸ் மேலிடம் உறுதியாக உள்ளது.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் உட்பூசல் அதிகரித்து வருவதால் அடுத்து அந்த மாநிலங்களின் விவகாரங்களை கவனிக்க வேண்டிய நிலையில் காங்கிரஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com