ஓட்டுப்போடும் வயது கூட ஆகாத பேரனை, அரசியல் வாரிசாக அறிவித்த சித்தராமையா! கர்நாடக அரசியலில் ஒரு கலகலப்பு!
வருணா சட்டமன்றத்தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட சித்தாராமையா, இதுவே தான் போட்டியிடும் கடைசித் தேர்தல் என்பதை அறிவித்திருக்கிறார்.
தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வெடுத்தாலும், அரசியலில் தொடருவேன் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார். முன்னாள் பிரதமர் தேவ கௌடா கூட ஒருமுறை இப்படி அறிவித்தார் என்பதை நினைவுகூற வேண்டியிருக்கிறது. நான் விட்டுச் சென்ற பணிகளை தன்னுடைய குடும்பத்தினர் தொடர்வார்கள் என்கிறார்.
இந்திய அரசியலில் வாரிசு அரசியல் தவிர்க்க முடியாதது. மாநிலக்கட்சிகளில் தொடங்கி தேசியக்கட்சிகள் வரை அனைத்து கட்சிகளிலும் வாரிசு அரசியல் தலையெடுத்திருக்கிறது. மாநில அளவில் செல்வாக்கோடு உள்ள தேசியத் தலைவர்கள் கூட தங்களது வாரிசுகளை முன்னுக்கு கொண்டு வருவதில் மும்முரமாக இருக்கிறார்கள்.
பெரும்பாலான மூத்த அரசியல்வாதிகள், தங்களுடைய அரசியல் வாரிசாக மகனையோ அல்லது மகளையோ அறிவிப்பார்கள். கர்நாடகத்தில் சற்று வித்தியாசமாக மகனை மட்டுமல்ல பேரனையும் தன்னுடைய வாரிசாக அறிவிக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் முதல்வராகிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படும் சித்தாராமையா, தன்னுடைய மகன் யதீந்திரா மற்றும் பேரன் தவன் ராகேஷை தன்னுடைய அரசியல் வாரிசுகளாக அறிவித்திருக்கிறார்.
வருணா தொகுதியின் மண்ணின் மைந்தன் நான். முன்பு வருணா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது என்னுடைய சக்தியை மீறி பல்வேறு பணிகளை செய்திருக்கிறேன். பெங்களூருவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் சோமண்ணாவை பா.ஜ.கவினர் கட்டாயப்படுததி எனக்கெதிராக களத்தில் இறக்கியிருக்கிறார்கள். வருணா தொகுதி மக்கள் பணத்திற்கு மயங்கி என்னை கைவிட மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இதற்குப் பின்னர் அரசியலை வழிநடத்தும் பணியில் தனது மகனும், பேரனும் பார்த்துக்கொள்வார்கள் என்றதும் ஏகப்பட்ட கைதட்டல். வருணா தொகுதியில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு தன்னுடைய பேரனையும் அழைத்துச் சென்றிருந்தார். 17 வயது நிறைவான தவான் ராகேஷ், மேடையேறி தன்னுடைய தாத்தாவுடன் கூட்டத்தினரை பார்த்து கையசைத்தார்.
தவான் ராகேஷ்க்கு இன்னும் ஓட்டுப்போடும் வயதில்லை என்று அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டியது சுதாரித்துக்கொண்ட சித்தாராமையா, தன்னுடைய பேரன் தேர்தலில் போட்டியிட இன்னும் 8 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்றார்.
தவான் ராகேஷ் இன்னும் தன்னுடைய படிப்பை முடிக்கவில்லை. அவர் படித்து முடித்த பின்னர்தான் அவரால் தேர்தல் அரசியலுக்கு வரமுடியும் என்றார். விரைவில் கட்சியில் சேர்ந்து மக்களின் அங்கீகாரத்தை பெறுவார் என்றும் சீதாராமையா தெரிவித்திருக்கிறார்.
ஓட்டுப்போடும் வயது கூட ஆகாத பேரனை திடீரென்று சித்தாரமையா முன்னிறுத்தவேண்டிய காரணம் என்ன? முதல்வர் போட்டிக்கான களத்தில் உள்ள டி.கே.சிவகுமாருடன் மோதுவதற்கு புதிய அதிகார மையங்களை உருவாக்கிட நினைக்கிறாரோ என்றெல்லாம் பா.ஜ.கவினர் தரப்பில் பேசப்படுகிறது.