ஹிஜாப் மீதான தடையை நீக்க சித்தராமையா அரசு பரிசீலனை?

ஹிஜாப் மீதான தடையை நீக்க சித்தராமையா அரசு பரிசீலனை?

கர்நாடகமாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்து சித்தராமையா அரசு பரிசீலித்து வருகிறது. விரைவில் இதற்கான தடையை நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்து காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றுள்ளனர். முதல் கட்டமாக 8 அமைச்சர்களும் பதவியேற்றுள்ளனர்.

அமைச்சரவையை விரிவுபடுத்துவது குறித்து சித்தராமையா அரசு விவாதித்து வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது டி.கே.சிவக்குமார், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வகுப்புவாத அடிப்படையில் பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள் முற்றிலுமாக வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரிடம் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கப்படுமா என்று கேட்டதற்கு, இது அரசின் கொள்கை முடிவு என்பதால் கருத்து கூறவிரும்பவில்லை என்றார். ஆனால், அமைச்சர் பிரியங் கார்கே, செய்தியாளர்களிடம் பேசுகையில் முந்தையை பாஜக அரசு அமல்படுத்திய ஹிஜாப் மீதான தடை விரைவில் விலக்கிக் கொள்ளப்படும். மேலும் பசுவதை தடைச்சட்டமும் வாபஸ் பெறப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஹிஜாப் தடை சட்டம், மதமாற்ற தடை சட்டம் உள்ளிட்ட முந்தைய பா.ஜ.க. அரசின் திட்டங்களை விலக்கிக் கொள்ள இப்போதுள்ள காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் கனகபுரா நகர் அருகே கபலபெட்டா என்னுமிடத்தில் 114 அடி உயர யேசு கிறிஸ்து சிலை நிறுவுவது குறித்தும் ஒரு முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் பள்ளி, கல்லூரிகளுக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்துவருவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்தது. ஹிஜாப் அணியாமல் பள்ளி, கல்லூரிகளுக்கு வரமாட்டோம் என்று மாணவிகள் தெரிவித்திருந்தனர். பா.ஜ.க. இந்துத்துவாவை கையிலெடுக்க இந்த விவகாரத்தை பயன்படுத்திக்கொண்டது. விரைவில் மக்களவைக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த விவகாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்பட காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com