சித்தராமையா பதவியேற்பு:
மம்தா, சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு!

சித்தராமையா பதவியேற்பு: மம்தா, சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு!

கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் நாளை (சனிக்கிழமை) பதவியேற்கிறார்கள். பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டரங்கில் பகல் 12.30 மணி அளவில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சித்தராமையா, டி.கே.சிவக்குமார் மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகள் அடங்கிய குழு மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலோட்டை ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆட்சியமைக்கும் உரிமை கோரினார்கள். இதையடுத்து ஆட்சியமைக்க வருமாறு ஆளுநர் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முன்னதாக வியாழக்கிழமை இரவு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பங்கேற்ற கூட்டத்தில் சித்தராமையா முதல்வராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரஸ் தலைவர்கள் ஆர்.வி.தேஷ்பாண்டே, ஹெச்.கே.பாட்டீல் மற்றும் லெட்சுமி ஹெப்பால்கர் சித்தராமையாவின் பெயரை முதல்வர் பதவிக்கு முன்மொழிந்தனர். இதையடுத்து டி.கே.சிவக்குமார், சட்டப்பேரவை கட்சித் தலைவராக சித்தராமையா தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானத்தை கொண்டுவந்தார். அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரித்தனர்.

இந்த நிலையில் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலோட், ஹிமாச்சல் மாநில முதல்வர் சுக்வீந்தர் சிங் சுக்கு, சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பிகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பாரூக் அப்துல்லா, சிவசேனை உத்தவ் பிரிவு தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், , சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. கட்சியின் வெற்றிக்கு முக்கிய காரணமான முன்னாள் முதல்வர் சித்தராமை, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் இருவரும் முதல்வர் பதவி தங்களுக்குத்தான் தரப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தனர்.

இதைத் தொடர்ந்து முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கும் தீர்மானத்துக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்திருந்தனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சித்தராமையா, சிவக்குமார் இருவரையும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஆனாலும் கடந்த ஐந்து நாள்களாக முதல்வர் யார் என்பதை தேர்ந்தெடுப்பதில் இழுபறி நிலை நீடித்தது.

பின்னர் ஒருவழியாக கர்நாடக முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயாளர்களில் ஒருவரான கே.சி.வேணுகோபால் வியாழக்கிழமை அறிவித்தார். மேலும் சிவக்குமார் 2024 ஆம் ஆண்டு தேர்தல் வரை கட்சியின் மாநிலத் தலைவராக நீடிப்பார் என்றும் கூறினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com