பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்: எதிர்க்கட்சிகளுக்கு ஸ்மிருதி இரானி கேள்வி!

பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள்: 
எதிர்க்கட்சிகளுக்கு ஸ்மிருதி இரானி கேள்வி!

ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பிகார் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை தட்டிக் கேட்க தைரியமில்லாத எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தை மட்டும் எழுப்புவது ஏன் என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேள்வி எழுப்பினார். மணிப்பூரில் வன்முறை கொழுந்துவிட்டு எரிவதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திதான் காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

மாநிலங்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது காங்கிரஸ் எம்.பி. அமி யாஜ்னிக் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பினார். மணிப்பூர் விவகாரம் குறித்து பெண் அமைச்சர்கள் வாய்திறக்கமாட்டார்களா என கேள்வி எழுப்பினார். இதற்கு கோபாவேசத்துடன் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்தார். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் அத்துமீறல்கள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்காதது ஏன் என்று கேட்டார்.

காங்கிரஸ் எம்.பி.யின் பேச்சுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கிறேன். ஏனெனில் பெண் அமைச்சர்களும், பெண் அரசியல்வாதிகளும் மணிப்பூர் மட்டுமல்ல, ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் பிகாரில் நடைபெறும் அத்துமீறல்கள் குறித்தும் பேசியுள்ளனர். பா.ஜ.க. அல்லாத மாநிலங்களில் நடைபெறும் அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுக்கவோ அல்லது விவாதிக்கவோ  உங்களுக்கு (எதிர்க்கட்சிகளுக்கு) தைரியம் இருக்கிறதா என்று கேட்டார்.

காங்கிரஸ் ஆட்சிசெய்த மாநிலங்களில் பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்து வெளியில் சொல்லும் துணிச்சல் உங்களுக்கு எப்போது வரும்? மணிப்பூர் வன்முறை கொழுந்துவிட்டு எரிவதற்கு ராகுல்காந்தியே காரணம். இதைச் சொல்ல உங்களுக்கு தைரியம் உண்டா? பெண் அமைச்சர்கள் மீது தேவையில்லாமல் புழுதிவாரி தூற்றாதீர்கள் என்று கூறினார். அப்போது அவையில் இருந்தவர் பலத்த கரவொலியுடன் அவரது பேச்சை வரவேற்றனர்.

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியதிலிருந்தே ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்து வருகிறது. மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிட வேண்டும், இது பற்றி விவாதிக்க முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. ஆனால், இது விஷயத்தில் அவையில் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள்தான் அமளியில் ஈடுபட்டு அவையை செயல்படாமல் தடுப்பதாகவும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு கூறிவருகிறது.

இரு தரப்பினருமே தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக ஒத்திவைப்பு தீர்மானங்களை பலமுறை கொண்டுவந்தனர். மணிப்பூரில் இந்த ஆண்டு மே மாதம் வன்முறை வெடித்தது. இதில் 160 பேர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். மெய்டீஸ் சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்று கோரி பேரணி நடத்தியதை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது.

மேலும் சமீபத்தில் பழங்குடியின பெண்கள் இருவர் நிர்வாண கோலத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விடியோ வெளியானது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதன்முறையாக வாய்திறந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மணிப்பூர் விடியோ சம்பவம் நாட்டுக்கே அவமானம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பேசினார்.இந்த விடியோ சம்பவம் தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com