கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து போராடிய ஸ்மிருதி இராணியைக் காணவில்லை; எப்போது வருவார்? மகிளா காங்கிரஸ் அதிரடி
காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு. பத்தாண்டுகளுக்கு முன்னர் கேஸ் சிலிண்டர் விலை உயர்வை எதிர்த்து, தெருவில் இறங்கி போராட்டம் நடத்திய ஸ்மிருதி இராணி என்பவரை காணவில்லை. அவரைக் கண்டுபிடித்து தருபவர்களுக்கு எட்டு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறது, ஆந்திரப் பிரதேச மகளிர் காங்கிரஸ் அமைப்பு.
ஐக்கிய முன்னணி ஆட்சியின்போது கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்காக தெருவில் இறங்கி போராடிய பா.ஜ.க தலைவர் ஸ்மிருதி இராணியின் படத்தை முகமூடியாக அணிந்தபடி ஹைதராபாத்தில் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். எங்கே இருக்கீங்க, ஸ்மிருதி இராணி? வெளியே வாங்க என்று என்று கோஷமிட்டபடி மகளிர் காங்கிரஸ் அணியினர் ஊர்வலமாக வந்தார்கள்.
பா.ஜ.க அலுவலகத்திற்கு எதிராக தர்ணா நடத்திய மகிளா காங்கிரஸ் தலைவி சுனிதா ராவ், காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டார். சமையலுக்கான கேஸ் விலை 410 ரூபாய் இருந்தபோது போராட்டம் நடத்திய ஸ்மிருதி இராணி இன்று பா.ஜ.க ஆட்சியில் சிலிண்டர் விலை 1200 ரூபாயாக உயர்ந்திருப்பது குறித்து என்ன செய்யப் போகிறார் என்று கேள்வியெழுப்பினார்கள்.
ஆட்சிக்கு வந்தால் சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதாக உறுதியளித்த பிரதமர் மோடி, ஆட்சிக்கு வந்த பின்னர் அத்தனையையும் 300 சதவீதம் உயர்த்தியிருக்கிறார் என்று மத்திய அரசின் போக்கை கண்டித்து பேசினார்கள்.
அதெல்லாம் சரி, ஆந்திராவில் மட்டுமல்ல கேஸ் சிலிண்டர் விலை நாடு முழுவதும் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மகளிர் அமைப்பு ஏன் போராட்டம் நடத்தவில்லை? இதற்குமா அறிவாலயத்தின் உத்தரவுக்கு காத்திருப்பது என்று கிண்டலடிக்கிறார்கள், நாம் தமிழர் தம்பிகள்.