"சிலர் கட்சியை ஏலம் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்"முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
தமிழ்நாட்டின் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், ’உங்களில் ஒருவன் பதில்கள்’ என்ற தலைப்பில் பல்வேறு கேள்விகளுக்கு காணொலி வாயிலாக விடையளித்தார்.
சமீபத்தில் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி எது?
தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் வெளியாவது தான் அண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அளித்த செய்தி என்று பதிலளித்தார்.
ஞாயிற்றுக்கிழமைகூட ஆய்வுப் பணிகளை மேற்கொள்வது ஏன் ?
முதலமைச்சருக்கு சனி, ஞாயிறு எல்லாம் கிடையாது என்று பதிலளித்த அவர், திட்டங்களை நாம் நினைக்கக் கூடியதைவிட வேகமாக முடிக்கலாம் என்பதற்காகத்தான் கள ஆய்வு மேற்கொள்வதாகவும், களப்பணி தனக்கு புதியது அல்ல என்றும், தான் களப்பணி ஆற்றியே முன்னுக்கு வந்தவன் என்றும் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் களநிலவரம்?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் துயரமான சூழலில் வந்துள்ளதாக கூறினார். அரசியலில் வழக்கமாக தந்தை மறைவிற்கு பிறகு மகனுக்கு வாய்ப்பு வருவதாக தெரிவித்த அவர், திருமகன் ஈவெரா மறைந்து, அவரது தந்தை போட்டியிடும் நிலை வந்திருப்பதாக குறிப்பிட்டார். கனத்த இதயத்துடன் தான் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் களத்தில் நிற்பதாகவும் தெரிவித்தார்.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்த முதலமைச்சர், திமுக அரசின் சாதனைகளும் மக்கள் நலத்திட்டங்களும், கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பும் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுத் தரும் என்று கூறினார். இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்லாமல், இனி வரும் எந்த தேர்தலாக இருந்தாலும், அவற்றில் திமுக கூட்டணி தான் வெல்லும் என்பது உறுதி என்றும் தெரிவித்தார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டது ஏன்?
குடியரசு நாள் தேநீர் விருந்து என்பது காலங்காலமாக இருக்கும் நடைமுறை என்றும், அதில் பங்கேற்றது மக்களாட்சியின் மாண்பை காப்பாற்றுவதற்குத் தான் என்றும், இதில் எந்தவித அரசியல் பின்வாங்கலோ, முன்வாங்கலோ, சமரசமோ இல்லை என்றும் பதிலளித்தார்.
ஊடகங்களின் இன்றைய போக்கு குறித்து?
சில ஊடகங்கள் பிரச்னைகளை மட்டுமே ஒளிபரப்புவதாகவும், அந்த பிரச்னைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பதிலளித்தார். பிரச்னைகளை ஒளிபரப்பிய ஊடகங்கள், அது தொடர்பாக எடுத்த தீர்வு நடவடிக்கையை வெளிப்படுத்துவது இல்லை என்று குறிப்பிட்டார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பொருட்கள் ஏலம் விடப்படுவது ஏன்?
சிலர் அவரது கட்சியை ஏலம் விட்டுக் கொண்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.