காங்கிரஸ் செயற்குழுவில் சோனியா, ராகுல்? காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு முழு அதிகாரம்!
காங்கிரஸ் செயற்குழுவில் உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்க, காங்கிரஸ் வழிகாட்டுதல் குழு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முக்கிய முடிவுகளை எடுக்கும் காங்கிரஸ் செயற்குழுவில் இடம்பெற முடியும்.
நாட்டின் அரசியல் நிலவரம், பொருளாதார சூழல், வெளியுறவுக்கொள்கை, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க காங்கிரஸ் கட்சியின் 2 நாள் மாநாடு சத்தீஸ்கரில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆண்டு 9 மாநிலங்களிலும், அடுத்த ஆண்டு மக்களவைக்கும் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் செயற்குழு தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. 23 உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் செயற்குழுவில் 12 பேர் தேர்தல் மூலமாகவும் 11 பேர் நியமனம் மூலமும் தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், செயற்குழு உறுப்பினர்களை நியமிக்கும் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சித் தலைவருக்கே வழங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் கட்சியின் முன்னாள் பிரதமர்களுக்கு செயற்குழுவில் பிரதிநிதித்துவம் அளிக்கவும் முடிவு செய்யப்பட்டதாக கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
முன்னதாக இந்தக் கூட்டத்தில் கட்சித்தலைவர் கார்கே பேசுகையில், ஜனநாயகத்துக்கும் அரசியல்சாசனத்துக்கும் அச்சுறுத்தல் அல்லது நெருக்கடி ஏற்படும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநாடு நடைபெறுகிறது. இதில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்படும்.
ராகுல்காந்தி எம்.பி.யின் ஒற்றுமை யாத்திரை பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றார்.