ஸ்டாலினின் துணைப் பிரதமர் கனவு: அண்ணாமலையின் அதிரடி!

ஸ்டாலின் - அண்ணாமலை
ஸ்டாலின் - அண்ணாமலை

தி.மு.க தலைமையிலான கூட்டணி, வெற்றிகரமாக ஐந்தாண்டுகளை கடந்திருக்கிறது. இதுவரையில் தி.மு.க அமைத்த கூட்டணியில் இதுவே வெற்றிகரமான கூட்டணி. இடதுசாரிகள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் என முரண்பாடுகள் இருந்தாலும் கூட்டணி தர்மத்தை காத்து, ஒற்றுமையாக தொடர்கிறார்கள்.

நாடாளுமன்றத் தேர்தல்களில் மட்டுமல்ல சட்டமன்றத் தேர்தல்களிலும் தி.மு.கவின் வெற்றிக்கு கூட்டணிக் கட்சிகள் உறுதுணையாக இருந்து வருகின்றன. தி.மு.கவின் தேர்தல் வரலாற்றை திரும்பிப் பார்க்கும்போது, கூட்டணியின் அவசியத்தை புரிந்து கொள்ளமுடியும். எப்போதெல்லாம் வெற்றிகரமாக ஒரு கூட்டணியை அமைக்க முடிந்திருக்கிறதோ அப்போதெல்லாம் தி.மு.கவால் எளிதாக வெற்றி இலக்கை எட்ட முடிந்திருக்கிறது.

2019ல் மட்டுமல்ல 1967, 1980, 1996, 2004 நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணிதான் தி.மு.க பிரம்மாண்ட வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. தி.மு.க தனித்து போட்டியிட்ட தேர்தல்களில் ஏனோ சோபித்ததில்லை. ஆனால், கூட்டணியை கட்டமைப்பதில் கெட்டிக்கார்கள். காங்கிரஸ் கட்சியோ அல்லது பா.ஜ.கவோ யாருடன் கூட்டணி சேர்ந்தாலும் இடங்களை பங்கீட்டுக் கொள்வதில் தி.மு.க தொடர்ந்து கறாராக இருந்து வந்திருக்கிறது.

2019 நாடாளுமன்றத் தேர்தலை தொடர்ந்து, 2021 சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்ற தி.மு.க கூட்டணியில் சேர இன்னும் சில கட்சிகளும் தயாராக இருக்கின்றன. முதல்வரின் டெல்லி விசிட், அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியுடன் தி.மு.க தலைமை காட்டிய நெருக்கத்தால் ஒருவேளை தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணிக்குள் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கமல்ஹாசன் கலந்து கொண்டிருப்பதால் மய்யமும் தி.மு.க கூட்டணி பக்கம் வர வாய்ப்பிருக்கிறது.

மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டத்தை கொண்டு வந்தால், ஸ்டாலின் அரசு வீழ்ந்துவிடும் என்பதை அ.தி.முகவும் தொடர்ந்து சொல்லிவருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருந்தாலும் தமிழ்நாடு அரசியல் இப்போதே பரபரப்பாக இருப்பதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.

இந்நிலையில் தி.மு.கவின் வெற்றிக்கு கூட்டணிதான் காரணமே தவிர தி.மு.க காரணமில்லை. தி.மு.கவால் தனித்து போட்டியிட்டு வெற்றி பெறமுடியாது என்று அதிரடி கிளப்பியிருக்கிறார், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. தனித்து போட்டியிட்டு பா.ஜ.கவால் ஒரு இடங்களில் கூட வெல்ல முடியாது என்று முதல்வர் ஸ்டாலின் பேசியதற்கு பதிலடி தந்த அண்ணாமலை, தி.மு.கவின் கூட்டணி தந்திரங்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்

1967ல் தி.மு.க ஆட்சிக்கு வரமுடிந்ததற்கு சுதந்திரா கட்சியோடும், மார்க்கிஸ் கம்யூனிஸ்ட் கட்சியோடும் கூட்டணி வைத்ததால்தான் சாத்தியமானது. 2021ல் ஆட்சியை பிடிக்க முடிந்ததற்கும் தி.மு.க காரணமல்ல. 12 கட்சிகளாடு தி.மு.க வைத்துக் கொண்ட கூட்டணிதான் காரணம் என்று டிவிட்டரில் குறிப்பிட்டிருக்கிறார்.

மத்தியில் ஆட்சி மாறினால், துணைப்பிரதமராகிவிடலாம் என்று ஸ்டாலின் கண்டிருந்த கனவெல்லாம் கலைந்துவிட்டது என்று அண்ணாமலை குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலினுக்கு டெல்லி அரசியலில் எப்போது ஆர்வம் வந்தது? துணைப் பிரதமராக வேண்டும் என்பதில் நிஜமாகவே அவருக்கு ஆர்வம் உண்டா என்று கேட்டபோது, அதற்குத்தான் அவசர அவசரமாக அடுத்த வாரிசுகளை அடையாளம் காட்டியிருக்கிறார் என்கிறது கமலாலயம் வட்டாரம். இதெல்லாம் உடன்பிறப்புகளுக்கு தெரியுமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com