மோடிக்கு எதிரான கருத்துகளை நிறுத்தினால் பி.பி.சி. மீதான வழக்குகள் காணாமல் போய்விடும்: ராகுல் காந்தி

மோடிக்கு எதிரான கருத்துகளை நிறுத்தினால் பி.பி.சி. மீதான வழக்குகள் காணாமல் போய்விடும்: ராகுல் காந்தி

பிரதமர் மோடிக்கு எதிராக கருத்துகள் கூறுவதை பி.பி.சி. நிறுத்தினால் வழக்குகள் காணாமல் போய்விடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறினார். 

லண்டனில் இந்திய பத்திரிகையாளர் சங்கத்தினருடன் ராகுல்காந்தி எம்.பி. உரையாடினார். அப்போது “இந்தியாவின் உட்பார்வை” என்பது குறித்து பேசுகையில், பிரதமர் மோடி அரசு மீதான தாக்குதலைத் தொடர்ந்தார். 

மோடியை எதிர்ப்பவர்களின் குரல்கள் ஒடுக்கப்படுகின்றன என்பதற்கு உதாரணம் பி.பி.சி. செய்தி நிறுவனத்தின் மீது  வருமானவரித் துறை நடத்திய சோதனை. ஆளுங்கட்சியை எதிர்த்து குரல் கொடுப்பவர்கள்மீது அடக்குமுறை  கட்டவிழ்த்து விடப்படுவதை வெளிஉலகுக்கு தெரிவிக்கவே  நாடு முழுவதுமான 4,000 கி.மீ. தொலைவுக்கு பாரத ஒற்றுமை யாத்திரையை நடத்தினேன். எதிர்க்கட்சியினரை ஒடுக்க முற்படுவதைத்தான் ஜனநாயகத்தின் மீதான தாக்குல் என்று நான் கூறுகிறேன். 

 பத்திரிகைகள், ஊடகங்கள், நிறுவனங்கள், நீதித்துறை, நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மக்களின் குரலை எங்களால் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்க முடியவில்லை. அதனால்தான் யாத்திரை மூலம் மக்கள் கவனத்துக்கு அவற்றை கொண்டு சென்றோம். 

 பல ஆண்டுகளாக பி.பி.சி. செய்தி நிறுவனம் இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. மோடி ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். அரசுக்கு ஒத்திசைக்கும் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. பி.பி.சி. செய்தி நிறுவனமும் மோடிக்கு எதிராக கருத்துக்கள் கூறுவதை நிறுத்தினால் அவர்கள் மீதான வழக்குகள் மாயமாக மறைந்துவிடும்” என்றார் ராகுல்காந்தி. 

 கடந்த மாதம் தில்லி மற்றும் மும்பையில் உள்ள பி.பி.சி. செய்தி நிறுவன அலுவலகங்களில் வரி ஏய்ப்பு செய்த்தாகக் கூறி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். 

 குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த கலவரங்களுக்கு பிரதமர் மோடியே முக்கிய காரணம் என்று சித்தரிக்கும் “இந்தியா: மோடிக்கு சில கேள்விகள்” என்னும் தலைப்பில் பி.பி.சி. ஒரு ஆவணப் படத்தை தயாரித்து வெளியிட்டது. இதைத் தொடர்ந்தே அதிரடி சோதனை நடந்தது. 

 எனினும் இந்த ஆவணப்படம் மோடியின் புகழை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் கூறி இதற்கு மத்திய அரசு தடைவிதித்தது. 

 இதனிடையே உலகின் ஜனநாயக நாடான அமெரிக்காவும், ஐரோப்பாவும் இதை கண்டுகொள்ள தவறியது ஏன் என்பது தெரியவில்லை என்று ராகுல்காந்தி வேதனையுடன் குறிப்பிட்டார். 

 இந்தியாவில் யாரும் மோடியை எதிர்த்துப் பேசாமல் மெளனமாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறது. இந்தியாவின் சொத்துக்கள் ஒரு குறிப்பிட்ட நான்கு அல்லது ஐந்து பேரிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்று பா.ஜ.க.வும் மோடியும் நினைக்கின்றனர் என்றும் ராகுல்காந்தி கூறினார். 

 அடுத்த பொதுத் தேர்தலுக்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன என்று கேட்டதற்கு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்புது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க.வை எதிர்க்க வேண்டும். தேர்தலில் பா.ஜ.க.வை தோற்கடிக்க வேண்டும் என்ற பொதுவான மனோநிலை அனைவரிடமும் உள்ளது. இதில் சந்தேகத்துக்கே இடமில்லை என்றார் ராகுல்காந்தி.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com