தென் மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு; அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!
Nandhini G

தென் மாவட்டங்களில் கடும் எதிர்ப்பு; அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி!

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூலை மாதம 11ம் தேதி கூடியது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்ச நீதிமன்றம் வரை சென்ற இந்த வழக்கில், ஜூலை 11ம் தேதி அதிமுக சார்பில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் எனத் தீர்ப்பு வந்தது.

இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், ‘தென் மாவட்டங்களில் தங்களுக்குத்தான் கட்சித் தொண்டர்களின் ஆதரவு அதிகம் உள்ளது’ எனக் கூறி வருகின்றனர். ஓபிஎஸ் தரப்பினரின் இந்தக் கூற்றை உடைக்கவும், தென்மாவட்டங்களும் தங்கள் வசம்தான் உள்ளன என்பதை நிரூபிக்கவும் அப்பகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்த அதிமுக தலைமை விரும்பியது. இதற்காக சிவகங்கையை தேர்ந்தெடுத்த அதிமுக தலைமை, அங்கு ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்து, முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜி.பாஸ்கரனுக்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, சிவகங்கை சிவன் கோயில் அருகே அதிமுகவின் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்தனர். இதையறிந்த ஓபிஎஸ் தரப்பு, பொதுக்கூட்டம் நடக்கவிருந்த அந்த இடத்திலேயே பால்குடம், திருவிளக்கு பூஜை நடத்த முடிவு செய்தனர். மேலும், அதே நாளில் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவும் முடிவு செய்திருந்தனர். இந்த இரு தரப்பு விஷயங்களுக்கும் போலீஸாரின் அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து, இரு தரப்பினரும் உயர் நீதிமன்றத்தை நாடி, தனியார் இடம் ஒன்றில் அதிமுக பொதுக்கூட்டத்தை நடத்தவும், ஓபிஎஸ் தரப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அனுமதி பெற்றனர். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதோடு, எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் சிலர் கிழித்தெறிந்தனர். அதோடு, பழனிச்சாமியைக் கண்டித்து பல இடங்களில் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.

இதனால் கூடுதல் பாதுகாப்பு கேட்டு அதிமுக தரப்பு, உயர் நீதிமன்றத்தை நாடியது. இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் அதிமுக பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. ஓபிஎஸ் அணியினரின் பலத்த எதிர்ப்பை அறிந்த அதிமுக தலைமை, வரவேற்பு நிகழ்வுகளை முற்றிலுமாக தவிர்த்து விட்டது. கட்சியை தனது முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக நினைத்திருந்த வேளையில், தென் மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுந்த கடும் எதிர்ப்பால் அதிமுக தலைமை கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com