கர்நாடக காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகளில் திடீர் திருப்பம்!
40 சதவீத கமிஷன், ஊழல் அரசு என்றெல்லாம் பா.ஜ.கவை எதிர்த்து கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியிருந்தாலும் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுத்த விஷயம், திராவிட மாடல் பாணியில் வெளியான இலவச வாக்குறுதிகள்தான்.
ஒரு வார இழுபறிக்கு பின்னர் முதல்வர் யாரென்று முடிவு செய்யப்பட்டு முதல்வர் சித்தராமையா பதவியேற்றதும் காங்கிரஸ் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றும் என்று பத்திரிக்கையாளர்களிடம் உறுதியளித்தார்.
இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுதான் புதிய அரசுக்கு முன் உள்ள பெரிய சவால் என்று விமர்சனங்கள் வந்த நிலையில் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு இலவச வாக்குறுதிகளை நிறைவேற்றிவிடலாம் என்கிற முடிவுக்கு சித்தாராமையா அரசு வந்திருக்கிறது.
கிருகஜோதி என்னும் திட்டத்தின்படி 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 200 யூனிட் பயன்படுத்துவர்களுக்கு மட்டுமே இலவசம். அதாவது ஒவ்வொரு மாதமும் சராசரியாக 800 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் கிடைக்கப்போவதில்லை. 800 யூனிட்டில் 200 யூனிட் போக மீதமுள்ள 600 யூனிட் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தினால் போதும் என்று நினைத்தவர்களுக்கு இது ஏமாற்றமளிக்கக்கூடும்.
உசித் பிரயாணா என்னும் பெயரில் மகளிருக்கான இலவச பயணமும் தமிழகம் போல் அல்லாமல் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது. தினமும் ஒரே பகுதியில் பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு மட்டுமே வழங்கப்படும். எந்த ரூட்டில் வேண்டுமானாலும் பயணம் செய்ய முடியும் என்று தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் நடைமுறை கர்நாடாகவில் இல்லை.
தமிழகத்தைப்போல் டீலக்ஸ் அல்லது செமி டீலக்ஸ் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்ள முடியாது. கர்நாடகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டுமே இலவசம் பயணம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பஸ் பயணத்தின்போது ஐடி கார்டு காட்டினால் கூட கர்நாடகத்தைச் சேர்ந்த பெண் என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இதை எப்படி அமல்படுத்தப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது.
யுவநிதி என்னும் பெயரில் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் தருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அது நடப்பாண்டில் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடும் மாணவர்களுக்கு மட்டும்தான். அதுவும் இரண்டு ஆண்டுகள் மட்டுமே தரப்படும். அதற்குள் வேலை கிடைத்துவிட்டால் ஊக்கத்தொகை நிறுத்தப்படும்.
அதே போல் அன்னபாக்யா என்னும் 10 கிலோ அரிசி இலவசமாக தரும் திட்டமும் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர்களுக்கு மட்டுமே தரப்படும். ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் 10 கிலோ இலவச அரிசி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
காங்கிரஸ் முன்வைத்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆண்டுதோறும் 65 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. பெண்களுக்கு மாதம் 2000 ரூபாய் உரிமைத்தொகை தரும் திட்டத்திற்கு மட்டும் 42 ஆயிரம் கோடி செலவாகும் என்பதால் அதை அமலுக்கு கொண்டு வருவதற்கு சில மாதங்களாகும்.
ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை தருவதாக சொன்ன தி.மு.க அரசே இரண்டு ஆண்டுகளுக்கு மேல் காலஅவகாசம் கேட்டிருப்பதால் கர்நாடகத்தில் அமலுக்கு வர ஓராண்டாகிவிடும் என்கிறார்கள்.