திணறும் பா.ஜ.க- தீர்மானமாகயிருக்கும் அ.தி.மு.க.

திணறும் பா.ஜ.க- தீர்மானமாகயிருக்கும் அ.தி.மு.க.

மிழக அரசியலில் தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே செல்வாக்கு பெற்ற கட்சிகளாக உள்ளன. தேசிய கட்சிகள் ஓரளவு செல்வாக்குடன் இருந்தாலும் கிராம அளவில் அக்கட்சிகளுக்கு பலம் இல்லை. இதனால் திராவிட கட்சிகளை சார்ந்துதான் தேசிய கட்சிகள் செயல்பட வேண்டிய சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது.

அதில் அ.தி.மு.க. தற்போது 4 பிரிவுகளாக உள்ளன. எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டி.டி.வி. தினகரன் என 4 பேரும் தனித்து செயல்பட்டு வருகின்றனர். அதில், எடப்பாடி பழனிசாமியிடம்தான் கட்சி உள்ளது. நிர்வாகிகளும் அதிகமாக உள்ளனர். இதனால் அவர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி..வி தினகரன், சசிகலா ஆகியோரை ஓரம் கட்டி விட்டார்.

2024ல் மக்களவை தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் கால் ஊன்ற பா.ஜ.க. பல வகைகளிலும் முயன்று வருகிறது. அ.தி.மு.க. தயவால் சட்டப்பேரவையில் 4 இடங்களைப் பிடித்தது. மக்களவையிலும் கணிசமான ஓட்டுக்களைப் பெற அ.தி.மு.க. தயவு தேவை. இதனால் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. வேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறது.

அ.தி.மு.க. தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அமித்ஷா கொடுத்த நெருக்கடிக்கு எடப்பாடி எதிர்ப்பு தெரிவிப்பதோடு, அதற்கு உடன்பட மறுத்து வருகிறார். இதனால், தமிழ்நாட்டில்  கூட்டணி விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க முடியாமல் டெல்லி தலைவர்கள் திணறி வருகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க. செல்வாக்கு பெற்ற கட்சியாக உள்ளது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களிடம் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைத்துள்ளது. மாநிலம் பல்வேறு துறைகளில் வேகமாக முன்னேறி வருகிறது. இதனால் பலம் பெற்ற தி.மு.க.வை எதிர்க்க வேண்டும் என்றால் அ.தி.மு.க. ஒருங்கிணைய வேண்டும் என்று ஒன்றிய உளவுத்துறையும் அறிக்கை அளித்துள்ளது. இதனால்தான் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறது. 

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ கட்சி முழுமையாக தன் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. இந்த நேரத்தில் தேவையில்லாமல் மற்ற 3 குழுவையும்  கட்சியில் சேர்த்தால் மீண்டும் தனக்கு எதிராக அவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு தன்னை காலி செய்து விடுவார்கள் என்று அச்சப்படுகிறார்.

இதனால் மற்ற அணிக்குள்  கட்சிக்குள் சேர்க்க அவர் விரும்பவில்லை. அவர்களை வெளியேற்ற படாத பாடு பட்டுள்ளார். இதனால் மீண்டும் சேர்க்க அவர் விரும்பவில்லை. இதனால் பா.ஜ.க. தலைமையிடம் 3 பேரையும் சேர்க்க முடியாது என்று கூறிவிட்டார்.

ஆனால் மோடியும், அமித்ஷாவும் அ.தி.மு.க. தலைவர்கள் ஒருங்கிணைய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தூது விட்டுக்கொண்டிருக்கின்றனர்.  ஆனால் எடப்பாடி பழனிசாமி மறுத்து வருவதால், அவருக்கு வேண்டிய தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்திக்கொண்டிருக்கிறது. .

மேலும் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி உள்பட பலரது பிடி தற்போது பா.ஜ.க.வின் கைகளில் உள்ளது. இவர்களில் பலருக்கு வருமான வரித்துறையின் வழக்கும் உள்ளது. அண்மையில் முன்னால் அமைச்சர் வேலுமணி மீது உள்ள ஊழல் வழக்கு உயர் நீதிமன்றத்தில்  தள்ளுபடி செய்யப்பட்டாலும்  சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்கிறது. மற்றும் சில அ.தி.மு.க. கட்சி தலைவர்களின்  உறவினர்கள், பினாமிகளின் கம்பெனிகள் மீதும் வழக்கு உள்ளது. இதனால், அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் தங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக்கொள்ள பா.ஜ.க. என்ன சொன்னாலும் செய்யத் தயாராக உள்ளனர். ஆனால், எடப்பாடி பழனிசாமியோ, என்ன செய்தாலும் பரவாயில்லை. தன்னையே சிறையில் அடைத்தாலும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. தேவைப்பட்டால் பா.ஜ.க.வை எதிர்த்து அரசியல் செய்யவும் தயார் என்று மூத்த தலைவர்களிடம் கூறி வருகிறார். தன் கட்சி தலைவர்கள் பாதிக்கப்பட்டாலும் பராவாயில்லை, கட்சி தன்வசம் இருந்தால் போதும் என்று நினைக்கிறார்.

அண்மைக்காலமாக அ.தி.மு.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பேச்சுக்கள் இதை எதிரொலிக்கின்றன. “பா.ஜ.க. எங்களை  மிரட்டி அடி பணிய வைக்க முடியாது” என்று ஜெயக்குமாரும், “எங்களை நம்பினா கரை சேர்ப்போம்... இல்லாவிட்டல் நட்டாற்றில் விட்டுவிடுவோம்” என்று செல்லூர் ராஜுவும் பேசியிருப்பது “எடப்பாடியின் கருத்துகள்தான்” என அந்தக் கட்சியினர் புரிந்து கொள்கின்றனர்.

2024ல் வரப்போவது தற்போது மக்களவை தேர்தல். இந்த தேர்தலில் தோற்பதால் அ.தி.மு.க.வுக்கு எந்த நட்டமும் இல்லை. பா.ஜ.க.வுக்குத்தான் வாழ்வா, சாவா பிரச்னை. அதனால் அவர்கள் வேண்டும் என்றால் என்னிடம் இறங்கி வரட்டும். இல்லாவிட்டால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைக்கட்டும். நான் தனியாக போட்டியிடத் தயாராக இருக்கிறேன் என்பதை தெளிவாக தன் செயல்கள் மூலம் வெளிப்படுத்துகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

“பா.ஜ.க. எத்தனை முறை அம்புகள் எய்தாலும், அசராமல் இருக்கும் எடப்பாடி பழனிசாமியை வழிக்கு கொண்டுவர அடுத்ததாக என்ன செய்யலாம்” என்று அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனர். அடிக்கடி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை டெல்லிக்கு அழைக்கப்படுவதும்  இதற்குதான். விரைவில் தமிழக அரசியலில் அதிரடிகள் இருக்கும் என்கிறது டெல்லி  பா.ஜ.க. வட்டாரம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com