அரசியலில் குதிக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ் மகள்!
அரசியலில் குதிக்கிறார் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ். அவர் தில்லி பாரதிய ஜனதா கட்சியின் சட்டப்பிரிவின் இணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் தில்லி பா.ஜ.க.வின் முழுநேரத் தலைவராக வீரேந்திர சச்தேவா நியமிக்கப்பட்டார். இவர் தலைவராக பொறுப்பேற்றதும் முதல் நடவடிக்கையாக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜை மாநில சட்டப்பிரிவின் இணை அமைப்பாளராக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் பன்சூரி ஸ்வராஜின் நியமனம் உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார். அவரது வருகை கட்சியை பலத்தப்படுத்த உதவும் என்று நம்புவதாகவும் கூறியுள்ளார்.
தில்லி சட்டப்பிரிவு இணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வின் முக்கிய தலைவர்களுக்கு பன்சூரி நன்றி தெரிவித்துள்ளார்.
“பாரதிய ஜனதா கட்சியின் தில்லி மாநில சட்டப்பிரிவு இணை அமைப்பாளராக என்னை நியமனம் செய்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பி.எல்.சந்தோஷ், தில்லி பா.ஜ.க. தலைவர் வீரேந்திர சச்தேவ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பன்சூரி டுவிட்டர் மூலம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பன்சூரி ஸ்வராஜ் தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்து வருகிறார். தில்லி பார் கவுன்சிலில் 2007 ஆம் ஆண்டு பதிவு செய்துகொண்ட அவருக்கு சட்டத்துறையில் 16 ஆண்டுகள் அனுபவம் உள்ளது.
வார்விக் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கிலத்தில் ஹானர்ஸ் பட்டம் பெற்ற அவர், லண்டனில் சட்டப்படிப்பு படித்தார். பின்னர் பாரிஸ்டராக தகுதி பெற்றார். அதன் பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள புனித காத்தரின் கல்லூரியில் சட்ட மேற்படிப்பை முடித்தார்.
சட்ட விவகாரங்களில் ஏற்கனவெ தாம் பா.ஜ.க.வுக்கு உதவி வருவதாகவும், இப்போது சட்டப்பிரிவு இணை அமைப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதன் மூலம் முறைப்படி சேவை செய்ய தமக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் பன்சூரி ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.