சிறுபான்மையின மாணவர்கள் உதவித் தொகையை மீண்டும் தொடர சு.வெங்கடேசன் வலியுறுத்தல்!
கல்வி உரிமைச்சட்டத்தின் பெயரில் சிறுபான்மையின மாணவர்கள் உதவித் தொகையை நிறுத்தி வைத்திருந்தது மத்திய அரசு. அதனை மீண்டும் தொடர வலியுறுத்தி, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஒரு லட்சத்திற்குக் கீழ் ஆண்டு வருமானம் உள்ள சிறுபான்மை குடும்ப மாணவர்களுக்கு, 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு மாதம் 100 ரூபாயும், 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயில்வோருக்கு ஆண்டுக்கு 500 ரூபாயும் , பயிற்சிக் கட்டணம் மாதம் 350 ரூபாய்க்கும் , விடுதியில் தங்கி படிக்கும் மாணவருக்கு மாதம் 600 ரூபாயும், வீட்டில் இருந்து படிக்கும் மாணவருக்கு 100 ரூபாயும் என உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதனால், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வந்தனர்.
கல்வி உரிமைச் சட்டம் 2009 அடிப்படையில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை பெறுகிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டி, இனி இந்த உதவித்தொகை 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்ற அரசாணையை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டிருந்தது. இதன் விளைவாக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் புதுப்பிக்க சமர்பித்த விண்ணப்பம் மத்திய அமைச்சகத்தால் நிரந்தரமாக நிராகரிப்பதாகக் குறிப்பிடப்பட்டது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்குக் அப்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இது தொடர்பாக மதுரை தொகுதி நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், அப்போதே (28.11.1022) மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி ராணிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில், எதற்காக 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தொடர வேண்டும் என்பதை குறிப்பிட்டிருந்தார். ஆனால் மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசனின் கடிதத்திற்கு பதில் அளித்து 29.03.2023 அன்று அமைச்சர் ஸ்மிருதி ராணி அனுப்பியிருந்த பதில் கடிதத்தில் சரியான காரணத்தை எதுவும் குறிப்பிடப் படவில்லை என்று கூறப்படுகிறது
சச்சார் கமிட்டியின் பரிந்துரையின்படி கடந்த 2006-ம் ஆண்டு, அப்போதைய பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான அரசால் சிறுபான்மையினருக்கான நலத்துறை உருவாக்கப்பட்டது. இது இந்தியாவில் இருக்கும் சிறுபான்மையினர் மதங்களான முஸ்லீம், கிறித்துவம், புத்தம், சீக்கியம், பார்சி, சமணம் மக்களுக்கான நலத்துறை அமைச்சகம் ஆகும்.
இதன் கீழ், சிறுபான்மையின மக்களை, சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் உயர்த்தும் நோக்கில் திட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படும். சிறுபான்மை பள்ளி மாணவர்களின் பள்ளி இடைநிற்றலைத் தடுக்கவும், நிதிச் சுமையைக் குறைத்து மெட்ரிக்குக்கு முன்பான கல்விக்கு உதவித்தொகை’ என்னும் திட்டத்தின் கீழ் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரைப் பயிலும் சிறுபான்மை மாணவர்கள் இத்திட்டத்தின் பயனாளர்களாக இருந்தனர்.