தமிழக அமைச்சரவை மாற்றம் - ஆவடி நாசரின் அமைச்சர் பதவி பறிப்பு; பி.டி.ஆருக்கு துறை மாற்றம்?

தமிழக அமைச்சரவை மாற்றம் - ஆவடி நாசரின் அமைச்சர் பதவி பறிப்பு; பி.டி.ஆருக்கு துறை மாற்றம்?

இரண்டாண்டு ஈடில்லா ஆட்சியை நிறைவு செய்து, மூன்றாவது ஆண்டை தொடங்கும் தி.மு.க அரசு, இன்னொரு அமைச்சரவை மாற்றத்தை எதிர்கொள்கிறது. இது குறித்து எதிர்பார்ப்புகள் ஒரு வாரமாக தொடர்ந்த நிலையில் நாளை ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நடைபெற இருக்கிறது. 

தமிழக அமைச்சரவையில் இருந்து ஆவடி நாசர் விடுவிக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக டி.ஆர்.பாலுவின் மகனும் மன்னார்குடி எம்.எல்.ஏவுமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்படுகிறார். புதிய அமைச்சராக நாளை பதவியேற்கும் நிலையில் இன்னும் சில அமைச்சர்களில் துறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. 

குறிப்பாக நிதித்துறை அமைச்சராக இருந்து வரும் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொடர்புத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்படுவார் என்றும், ஏற்கனவே தகவல் தொடர்புத்துறை அமைச்சராக இருந்துவரும் மனோ தங்கராஜ், பால்வளத்துறைக்கு மாற்றம் செய்யப்படுவார் என்றும் கோட்டை வட்டாரத்தில் செய்திகள் அடிபடுகின்றன. 

புதிதாக பதவியேற்கும் டி.ஆர்.பி ராஜாவுக்கு சுற்றுலாத்துறை வழங்கப்படும் என்றும் தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை அல்லது கூடுதல் துறைகள் வழங்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இது தவிர சர்ச்சையில் சிக்கியுள்ள இன்னும் 3 அமைச்சர்களின் துறைகளும் மாற்றியமைக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால், கலைஞர் காலத்தில் அமைச்சர்களாக இருந்த மூத்த அமைச்சர்களின் துறைகளில் எந்த மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள். 

தி.மு.க ஆட்சி ஓராண்டை நிறைவு செய்தபோது, அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. ராஜகண்ணப்பன் மீதான புகாரைத் தொடர்ந்து போக்குவரத்துத் துறை அமைச்சராக சிவசங்கர் நியமிக்கப்பட்டார். பின்னர் இரண்டாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது விளையாட்டு மற்றும் இளைஞர் மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டார். தற்போது மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட இருக்கிறது. 

சுற்றுலாத்துறை, நிதித்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை போன்ற துறைகளிலும் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை நிறைய மாற்றங்களை செய்ய முதல்வர் முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன. பல அமைச்சர்களின் துறைகள் இறுதி நேரத்தில் மாற்றம் செய்யப்படவும் வாய்ப்புகள் உண்டு. அமைச்சரவை மாற்றங்கள் குறித்து ஏராளமான வதந்திகள் இம்முறை நிறைய வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com