தெலுங்கானா, ஆந்திரா பிரதேச மாநிலங்களை தமிழ்நாடு பின்பற்ற வேண்டும் - திருமாவளவன் தோழமைச் சுட்டுதல்!

தெலுங்கானா, ஆந்திரா பிரதேச மாநிலங்களை தமிழ்நாடு பின்பற்ற வேண்டும் - திருமாவளவன் தோழமைச் சுட்டுதல்!

ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதி (SCSP) நடப்பாண்டில் 63.65 % வரை செலவழிக்கப்படாமல் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பப்படுவதாக சென்ற மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன. ஏற்கனவே வேங்கை வயல் சம்பவம் குறித்தும், அதில் ஈடுபட்டுவர்களை உடனே கண்டறியும் நடவடிக்கைகள் மேற்கொள்ளாதது தலித் அமைப்புகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.

ஆதிதிராவிட சமூக மக்களை கல்வி, சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மேம்படுத்துவதற்காக பல ஆண்டுகளாக மத்திய நிதி தொகுப்பிலிருந்து நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ஆதிதிராவிடர் துணைத்திட்ட நிதியாக ரூ.16,422 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்த நிலையில் இதுவரை ரூ.5,976 கோடி மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது என்கிறார்கள்.

நடப்பு நிதியாண்டு நிறைவடைய இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் எஞ்சியுள்ள நிதியை எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்கிற கேள்வி எழுகிறது. சென்ற ஆண்டிலும் இதே போல் 70 % நிதி மட்டும் செலவு செய்யப்பட்டு ஏறக்குறைய 16.81 % நிதி திருப்பி அனுப்பப்பட்டது.

சமீபத்தில் இது குறித்து கருத்து தெரிவித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ஆதிதிராவிடர்களுக்கான துணைத்திட்ட நிதியை தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேச மாநிலத்து அரசுகள் திறம்பட கையாள்வதாகவும், அதே போன்று தமிழக அரசுவும் திறம்பட கையாள வேண்டும் என்று தோழமையுடன் சுட்டிக்காட்டியவர், சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரவும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

தெலுங்கானா முதல்வரை சந்தித்தபோது, SCSP திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்து வீடியோவை அவர் தன்னிடம் காட்டி விளக்கியதாகவும் குறிப்பிட்டார். பத்து லட்ச ரூபாய் நிதியுதவி கேட்டு ஒரு தலித் விண்ணப்பிக்க வேண்டிய நடைமுறைகளை தொடர்பான சந்தேகங்களை கேட்டபோது, அது குறித்து தெலுங்கானா முதல்வர் விவரித்ததாகவும் தலித் மக்களின் மேம்பாட்டுக்காக எதையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவில் உள்ள தலித் மக்கள் எதையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது என்று குறிப்பிட்ட திருமாவளவன், இந்திரா காந்தி காலத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கான துணைத்திட்ட நிதியை சரியாக பயன்படுத்துவதில் இன்றும் சிக்கல் நீடிக்கிறது. அதை தலித் மக்களுக்காக முழுமையாக பயன்படுத்துவதும், அதை நடைமுறைக்குக் கொண்டு வருவதும் அவசியம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com